Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Thiruvarutprakasa Vallalar

அக்டோபர் 5, 2026. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல், நம் இராமலிங்க அடிகளின் 204-வது அவதாரத் திருநாள்.

பிறப்பும் இளமையும் ;- 1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி, கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூர் கிராமத்தில் அவதரித்தார். தந்தை இராமையா பிள்ளை, தாய் சின்னம்மையார். சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகியோர் உடன்பிறந்தவர்கள்.

பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தவர், தாயுடன் பொன்னேரி, பின்னர் சென்னை ஏழுகிணறு, வீராசாமி பிள்ளை தெருவில் வாழ்ந்தார். சிறு வயதிலேயே தமிழிலும், சமயத்திலும் பெரும் புலமை பெற்று விளங்கினார். அண்ணன் சபாபதியின் சொற்பொழிவை தானே ஏற்று நடத்திய அற்புதமும் நிகழ்ந்தது.

சமூக சீர்திருத்தச் சுடர் ;- வள்ளலார் ஒரு ஆன்மிகவாதி மட்டுமல்ல, பன்முக ஆற்றல் கொண்டவர். சிறந்த சொற்பொழிவாளர், உரையாசிரியர், சித்த மருத்துவர், பதிப்பாசிரியர், இதழாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, சன்மார்க்க சிந்தனையாளர்.

சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்தார். அதனால் அன்றைய பழமைவாத சமூகத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டார். அவருக்கு எதிராக ஆறுமுக நாவலர் வழக்கு தொடர்ந்த வரலாறும் உண்டு.

இதையும் படியுங்க  ஏலகிரி கோடை விழாவில் சொதப்பல்... மேடையிலேயே கலெக்டரை வெளுத்து வாங்கிய கே.சி.வீரமணி...!

இரு பெரும் கொடைகள் ;- மக்களின் கொடிய துயரமான பசியை போக்க, 23-05-1867 அன்று வடலூரில் 80 காணி நிலத்தில் சத்திய தருமசாலையை நிறுவினார். அங்கு சாதி, மத பேதமின்றி மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது. அந்த அடுப்பு இன்றளவும் அணையாமல் எரிகிறது. இன்று லட்சக்கணக்கானோருக்கு அவர் பெயரால் உலகெங்கும் பசியாற்றப்படுகிறது. இதற்கு தமிழக அரசு குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வழங்குவது பாராட்டுக்குரியது.

அனைத்து சமய நல்லிணக்கத்திற்காக வடலூரில் அவர் அமைத்ததே சத்திய ஞான சபை. இதன் கருவறையில் விளக்கு மட்டுமே கடவுளாக விளங்கும்.

வள்ளலாரின் கொள்கைகள் – சுருக்கமாக கடவுள் ஒருவரே – அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
புலால் உண்ணாமை, எந்த உயிரையும் கொல்லாமை.
சாதி, மத, இன, மொழி வேறுபாடு கூடாது.
சிறு தெய்வ வழிபாடும், அதன் பெயரால் பலியிடுதலும் கூடாது.
இறந்தவர்களை எரிக்காமல் சமாதி வைக்க வேண்டும்.
பசித்தவர்களுக்கு பேதமின்றி உணவளிப்பதே உயர்ந்த தருமம்.
எம்மத நிலையும் நின் அருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன்…
என்று எல்லா மதங்களையும் சம்மதமாக ஏற்பதாக திருவருட்பாவில் பாடுகிறார்.

இதையும் படியுங்க  Secondhand publicity to e-cigarette vapor is said to be less

பிள்ளைகளுக்கு அவர் அருளிய பத்து கட்டளைகள்

நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே, ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே, பசித்தோர் முகத்தை பாராதிராதே, இரப்போர்க்கு இல்லை என்னாதே, வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே, தந்தை தாய் மொழியை தள்ளி நடக்காதே.

படைப்புகள் ;- இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே திருவருட்பா – ஆறு திருமுறைகள். இது தவிர மனுமுறைகண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம், சின்மய தீபிகை, ஒழிவிலொடுக்கம் போன்ற நூல்களை பதிப்பித்தும், உரை எழுதியும் உள்ளார்.

தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சென்னையில் கழித்ததால், நவீன சமூகத்தின் பிரச்சினைகளை அன்றே உணர்ந்து சன்மார்க்கம் எனும் பொது நெறியை வகுத்தார். அன்று முற்போக்காக கருதப்பட்ட அவரது சிந்தனைகள் இன்று உலகம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன.

19-ம் நூற்றாண்டில் சாதி ஒழிப்பு முன்னெடுத்த வள்ளலார் மீது 20ம் நூற்றாண்டில் சாதி ஒழிப்பை முன்னெடுத்த தந்தை பெரியாருக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது. இதன் காரணமாக ஒருமுறை வடலூரில் உள்ள சத்திய ஞான சபையைக் காணும் விருப்பத்துடன் அங்குச் செல்கிறார். ஞான சபையின் முன் பக்கத்தில், `கொலையும் புலையும் தவிர்த்தவர் மட்டுமே வருதல் வேண்டும்’ என்ற அறிவிப்புப் பலகை மாட்டியிருந்தது. தான் புலால் உணவு உண்டிருந்ததால் உள்ளே செல்வது சரியாகாது எனப் பெரியார் திரும்பிச் சென்றுவிட்டார்!

இதையும் படியுங்க  This is a place the place I love to share in-depth evaluations

வள்ளலார், பெரியார் அயோத்திதாசர் என எத்தனையோ சமூக உணர்வாளர்கள் சாதி ஒழிந்து சமத்துவம் ஓங்க உழைத்திருக்கின்றனர். ஆனால், நம் சமூகத்தைப் பீடித்திருக்கும் சாதி வக்கிரங்கள் எப்போது அகலும் எனத் தெரியவில்லை. அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வோம் என வள்ளலாரின் பிறந்தநாளான இன்று உறுதிக் கொள்வோம்!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago