Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Fahadh Faasil

“அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, எனக்கு இணையாக நடிக்க அவர்களுக்கு நேரம் இல்லையோ என்று நினைக்கிறேன்!” என்று நடிகர் பகத் பாசில் கலகலப்பாகப் பதிலளித்துள்ளார்.

அவர் நடித்துள்ள புதிய திரைப்படமான ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ (Don’t Trouble The Trouble) படத்தின் செய்தியாளர் சந்திப்பில், “நீங்கள் பெரிய அளவில் கதாநாயகிகளுடன் இணைந்து நடிப்பதில்லை. உங்களுடன் நடிக்க கதாநாயகிகள் பயப்படுகிறார்களா?” என்று பகத் பாசிலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “கதாநாயகிகள் பயப்படுகிறார்கள் என்பதில் உண்மை இல்லை. எல்லாவற்றுக்கும் இந்த இயக்குநர்கள்தான் காரணம். அவர்கள்தான் இதுபோன்ற கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்” என்று நகைச்சுவையாகக் கூறினார்.

தொடர்ந்து, வில்லன் அல்லது ஹீரோ என எந்தக் கதாபாத்திரம் தனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கேட்கப்பட்டபோது, “நான் ஒரு நடிகன். எந்தக் கதாபாத்திரத்திலும் என்னால் சிறப்பாக நடிக்க முடியும். நீங்கள் என்னை ஒரு நல்ல நடிகனாக மட்டும் பாருங்கள்” என்று தனது பாணியில் பதிலளித்தார்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிறுமி சாரா பலேகர்தான் தனக்கு மிகவும் பிடித்தமான கோ-ஸ்டார் என்றும் பகத் பாசில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சாரா குறித்து ஜாலியாகப் பேசிய அவர், “படப்பிடிப்புத் தளத்தில் என்னிடம் குழந்தை மேலாண்மை (Child Management) பொறுமை நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். அதற்கு நான், ‘என் வீட்டிலேயே ஒரு குழந்தை இருக்கிறது. அதை நான் ஏற்கனவே கையாண்டு வருகிறேன்’ என்று கூறினேன்” என, தனது மனைவி நஸ்ரியாவைக் குறிப்பிட்டு நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.

மேலும், தெலுங்கு வசனங்களைப் பேசும்போது தான் தடுமாறிய பல தருணங்களில் சிறுமி சாரா தனக்கு வசனங்களைச் சொல்லிக் கொடுத்து சரிசெய்ததாகவும், அவரை பகத் பாசில் பாராட்டியுள்ளார். முழுநீளத் தெலுங்குப் படத்தில் நடிப்பது தனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "விதியை வெல்ல துடித்த 'இளம் சிங்கம்'… பாதியிலேயே நின்ற மின்னல் பயணம்! குதிரை ஜாக்கி கணேசன் விபத்தில் மரணம்!

“நான் முதலில் மலையாளத்தில் சிந்திப்பேன். பின்னர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதன்பிறகு தெலுங்கில் பேசுவேன். இது மிகவும் கடினமாக இருந்தது. இருந்தாலும், படத்தில் எனது சொந்தக் குரலில் டப்பிங் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்” என்று பகத் பாசில் கூறியுள்ளார்.

இதுவரை தெலுங்கு சினிமாவில் தனக்கு பெரிய அளவில் அறிமுகம் இல்லை என்றும், “ஒரு மனிதன் பேயைக் கடத்தினால் என்ன ஆகும்?” என்ற வித்தியாசமான குடும்ப ஃபேண்டஸி கதையைக் கொண்ட இந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் தனது செல்வாக்கு உயரும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் பெரும்பகுதி, சுமார் 90 சதவீத காட்சிகள், ஹைதராபாத்தின் நேரடி சாலைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. சாலைகளில் படப்பிடிப்பு நடைபெற்றபோது பொதுமக்கள் தன்னை அடையாளம் கண்டு புன்னகையுடன் வரவேற்றது தனக்கு புதுவிதமான உற்சாகத்தை அளித்ததாகவும் பகத் பாசில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் நகருடனான தனது நெருக்கத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். “கடந்த 5 ஆண்டுகளில் இந்த நகரம் எனக்கு ஒரு குடும்பம் போல மாறிவிட்டது. இங்குள்ள உஸ்மானியா பிஸ்கட், இரானி சாய் மற்றும் பிரியாணி எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும், “நான் சாப்பிடுவதில் மும்முரமாக இருக்கும்போதெல்லாம், என் இயக்குநரும் தயாரிப்பாளரும், ‘நீ இங்கு நடிக்க வந்திருக்கிறாய், சாப்பிட அல்ல!’ என்று கிண்டலாக நினைவூட்டுவார்கள்” என்றும் சிரித்துக்கொண்டே தெரிவித்துள்ளார்.

படத்தின் தயாரிப்பாளரான எஸ்.எஸ். கார்த்திகேயாவையும் பகத் பாசில் வெகுவாகப் பாராட்டியுள்ளார். “படப்பிடிப்பின்போது நான் செய்த அனைத்து வம்புகளையும், அடம்பிடிகளையும் ஒரு தம்பியைப் போல அவர் பொறுத்துக்கொண்டார். நான் லொகேஷனை விட்டு கிளம்பும் வரை என் வேனிட்டி வேனிலேயே அமர்ந்து என்னை அவ்வளவு சிறப்பாகக் கவனித்துக்கொண்டார்” என்று தயாரிப்புக் குழுவின் அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளார்.

இதையும் படியுங்க  "ஒரு சகாப்தம் மீண்டும் திரைக்கு வருகிறது - அனிருத்-ராஷ்மிகா கூட்டணியில் உருவாகும் எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு!"

இயக்குநர்களிடம் புதிய படங்களை ஒப்புக்கொள்ளும்போது, “ஏன் இந்தக் கதைக்கு என்னைத் தேர்வு செய்தீர்கள்? ஏன் நான்?” என்று தான் கேட்பதாகவும் பகத் பாசில் தெரிவித்துள்ளார். அதற்கு பல இயக்குநர்களும் பொதுவாகக் கூறும் ஒரே பதில், “இந்தக் கதையை எழுதும்போது உங்கள் முகம்தான் முதலில் என் நினைவுக்கு வந்தது” என்பதாக இருப்பதாகவும் அவர் சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார்.

Fahadh Faasil

சினிமாவில் தான் ஏற்றுள்ள வில்லன் கதாபாத்திரங்கள் குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். “நான் படங்களில் இதுவரை நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் பிறப்பிலேயே கெட்டவர்கள் அல்ல. சூழ்நிலைகளால்தான் அவர்கள் அப்படி மாறியவர்கள்” என்று தனது கதாபாத்திரங்களின் பின்னணியை விளக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சூர்யாவும் பகத் பாசிலை வெகுவாகப் பாராட்டினார். “நானும் பகத்தும் சினிமாவின் ஆரம்பக் காலத்தில் தோல்விகளைச் சந்தித்து, முட்டி மோதி, பல தடைகளைக் கடந்துதான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்” என்று சூர்யா உணர்வுப்பூர்வமாகப் பேசினார்.

அதே நிகழ்ச்சியில் பகத் பாசிலுடனான தனது நெருக்கத்தையும் சூர்யா நகைச்சுவையாகப் பகிர்ந்துகொண்டார். “பகத் என்னை எப்போதும் ‘அண்ணா’ என்றுதான் அழைப்பார். தப்பித்தவறிக்கூட என்னை ‘சார்’ என்று மாற்றிக் கூப்பிட்டுவிடாதீர்கள்” என்று அவர் பகத்திடம் ஜாலியாகக் கேட்டுக்கொண்டார்.

இந்தப் படத்தை தயாரித்துள்ள எஸ்.எஸ். கார்த்திகேயா, பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் மகன் ஆவார். படம் குறித்து தனது தந்தை கூறிய கருத்தையும் அவர் நேர்காணலில் பகிர்ந்துள்ளார். படத்தைப் பார்த்த எஸ்.எஸ். ராஜமௌலி, “பகத் பாசிலின் நடிப்பு இந்தக் கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அவர்தான் படத்தின் மிகப்பெரிய மேஜிக்” என்று பாராட்டியதாக எஸ்.எஸ். கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "வேட்டைக்களம் தயார்: 'KH 237' படத்தில் கமலை இளமையாக்கும் AI மேஜிக்… ஆக்ஷனில் இறங்கும் அன்பறிவு!"

பொதுவாக ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதிலும், விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதிலும் பகத் பாசில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக தெலுங்குத் திரையுலகில் நேரடியாக அறிமுகமாகும் நிலையில், ஹைதராபாத் ஊடகங்களைச் சந்திப்பது இதுவே முதல் முறை என்றும், தானே நேரில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், 2002-ம் ஆண்டு தனது தந்தை இயக்கிய முதல் திரைப்படம் படுதோல்வி அடைந்ததால் பயந்து இந்தியாவை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் 7 ஆண்டுகள் தங்கியிருந்த பழைய நினைவுகளையும் இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பகத் பாசில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்., பகத் பாசிலுடன் தனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். பகத் பாசில் தங்கியிருந்த வீட்டுக்கு சென்ற அவர், நள்ளிரவு 3 மணி வரை பகத்துடன் சினிமா மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியதாகவும், அந்த தருணத்துக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறினார்.

மலையாளத்தில் மட்டுமே சிங் சவுண்ட் (Sync Sound) முறையில் வசனம் பேசி பழகிய பகத் பாசிலுக்கு, முழுநீளத் தெலுங்குப் படத்தில் நடிப்பதும், தெலுங்கு வசனங்களை தனது சொந்தக் குரலில் பேசுவதும் புதிய அனுபவமாக இருந்துள்ளது. மொழி ரீதியான சவால்களை எதிர்கொண்டபோதும், கதாபாத்திரத்துக்குத் தேவையான இயல்பைத் தக்கவைத்துக்கொள்ள அவர் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நடிப்பு, மொழி, படப்பிடிப்பு மற்றும் புதிய திரையுலகில் அறிமுகம் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு உருவாகியுள்ள ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படம், பகத் பாசிலின் தெலுங்குத் திரையுலகப் பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago