தேனி மாவட்டம் கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியில், முருங்கை மரங்களை வெட்டிய விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், 80 வயது தந்தையை மகன் அரிவாளால் கழுத்தை வெட்டி தலையைத் துண்டித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக 43 வயதான மகன் கணேசனை கூடலூர் வடக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துமாயன், வயது 80. இவரது மகன் கணேசன், வயது 43. முத்துமாயன் வசித்து வந்த பூர்வீக வீட்டின் காலி இடத்தில் முருங்கை மரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மரங்களை கணேசன் வெட்டி அகற்றியுள்ளார். இதனைப் பார்த்த முத்துமாயன், “ஏன் மரத்தை வெட்டினாய்?” எனக் கேட்டு மகனை சத்தம் போட்டு கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறு முற்றியுள்ளது.
அப்போது அங்கு வந்த கணேசனின் 15 வயது மகன் ஹரிஹரன், தனது தந்தை மற்றும் தாத்தாவுக்கு இடையேயான சண்டையை விலக்க முயன்றுள்ளார். இருவரையும் சமாதானப்படுத்திய அவர், தனது தந்தை கணேசனை அங்கிருந்து அழைத்துச் சென்று வீட்டில் விட்டுள்ளார். இதையடுத்து பிரச்சினை முடிந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், கணேசனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
நள்ளிரவில் மீண்டும் தந்தை முத்துமாயன் வீட்டிற்குச் சென்ற கணேசன், அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளார். வீட்டில் இருந்த தேங்காய் வெட்டும் பெரிய அரிவாளை எடுத்த கணேசன், முத்துமாயனின் கழுத்தை வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதில் முத்துமாயனின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது.
கொடூரமான கொலையைச் செய்த பின்னரும் கணேசன் அங்கிருந்து தப்பிச் செல்லாமல், தந்தையின் தலை மற்றும் உடலை படுக்கையறையிலேயே போட்டுவிட்டு, அதற்குப் பக்கத்து அறைக்குச் சென்று தூங்கியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மறுநாள் காலை வரை அவர் அங்கேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, மறுநாள் காலை தனது தாத்தாவைப் பார்ப்பதற்காக ஹரிஹரன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது முத்துமாயன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்த சிறுவன், பின்னர் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கூடலூர் வடக்கு போலீசார், முத்துமாயனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவத்துக்குப் பிறகு தப்பியோடிய கணேசனை கைது செய்தனர்.
ஆரம்பத்தில், முத்துமாயன் வீட்டில் இருந்த முருங்கை மரத்தை வெட்டியதால் மகன் கணேசன் ஆத்திரமடைந்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், போலீசாரின் விரிவான விசாரணையில், வீட்டில் இருந்த முருங்கை மரங்களை வெட்டி அகற்றியது கணேசன்தான் என்பது தெரியவந்துள்ளது. “ஏன் மரத்தை வெட்டினாய்?” என தந்தை முத்துமாயன் சத்தம் போட்டு கண்டித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே கணேசன் இந்த கொடூரக் கொலையைச் செய்ததாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
கணேசன் தேங்காய் வெட்டும் கூலித் தொழில் செய்து வந்தவர் என்றும், அதன் காரணமாக தேங்காய் வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கூர்மையான பெரிய அரிவாளை வீட்டில் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தந்தை தன்னை கண்டித்ததால் ஏற்பட்ட கோபத்தில், அதே அரிவாளை எடுத்து நள்ளிரவில் இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், கணேசன் கடந்த சில காலமாகவே கடுமையான மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதற்காக தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரது குடும்ப வாழ்க்கையிலும் இதன் காரணமாக பிரச்சினைகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கணேசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், அவரது மனைவி அவரைப் பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கணேசன் தனது தந்தை முத்துமாயனுடன் பூர்வீக வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த சம்பவத்தில், சண்டையைத் தடுக்க முயன்ற பேரன் ஹரிஹரன் 11-ஆம் வகுப்பு படித்து வருவது தெரியவந்துள்ளது. தனது தந்தை கணேசன் தாத்தாவை தாக்க முயன்றபோது, ஓடிவந்து அவரை சமாதானப்படுத்தி தனியாக அழைத்துச் சென்றவர் ஹரிஹரன்தான். ஆனால், அடுத்த நாள் காலை தாத்தாவைப் பார்க்கச் சென்றபோது, அவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்ததை முதலில் பார்த்ததும் அந்தச் சிறுவன்தான்.
பூட்டப்பட்டிருந்த பூர்வீக வீட்டின் காலி இடத்தில் இருந்த முருங்கை மரங்களை வெட்டியதாகத் தொடங்கிய ஒரு சாதாரண குடும்பத் தகராறு, இறுதியில் 80 வயது முதியவரின் கொடூரக் கொலையில் முடிந்துள்ளது. குடும்பத் தகராறு, ஆத்திரம் மற்றும் கணேசனின் மருத்துவ சிகிச்சை தொடர்பான தகவல்கள் என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
