தமிழ்நாட்டில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 2,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும்; இல்லையெனில் சஸ்பெண்ட் உள்ளிட்ட கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையான MRP-ஐ விட கூடுதலாக பணம் வசூலித்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், கடந்த சில நாட்களில் 160 முதல் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக எழுந்த புகாரில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஒரே நாளில் 67 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக டாஸ்மாக் நிர்வாகம் தனிப்படைகளை அமைத்து ரகசிய சோதனைகளையும் நடத்தியுள்ளது.

இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையைக் கண்டித்தும், காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களையக் கோரியும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை மூடி திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான 8 மணி நேர வேலை, வாராந்திர விடுமுறை மற்றும் புதிய ஊதிய உயர்வு உள்ளிட்டவை அரசு சார்பில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது என அமைச்சர் எச்சரித்திருந்தார்.
இதனிடையே, காலி மது பாட்டில் வாங்கும் திட்டத்தால் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் நஷ்டம் ஏற்படுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பாட்டில்களைச் சேகரித்து வைக்க கடை வாடகை, பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான கூலி, போக்குவரத்தின்போது உடையும் பாட்டில்களுக்கான இழப்பு உள்ளிட்ட செலவுகளை தாங்களே ஏற்க வேண்டியிருப்பதாகவும், இதன் காரணமாகவே கூடுதல் பணம் வசூலிக்கும் நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஊழியர்கள் திடீரெனக் கடைகளைப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால், மதுபானம் வாங்குவதற்காகக் கடைகளுக்கு வெளியே காத்திருந்த பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. சில இடங்களில் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல் வாக்குவாதம் மற்றும் ரகளையிலும் சிலர் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறின.
இந்த நிலையில், காலி பாட்டில் வாங்கும் திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில், இனி இந்தப் பொறுப்பை மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமே ஒப்படைக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், மதுபான பாட்டிலின் MRP விலையிலேயே 10 ரூபாய் தொகையைச் சேர்த்து, QR குறியீடு மூலம் அதைக் கண்காணிக்கும் புதிய தொழில்நுட்ப முறைகளையும் டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் நிறுவனம் 50,845 கோடி ரூபாய் என்ற சாதனை அளவிலான வருவாயை ஈட்டியுள்ளது. அரசின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக டாஸ்மாக் திகழும் நிலையில், கடைகள் மூடப்படுவதால் ஏற்படும் வருவாய் பாதிப்பைத் தடுக்கவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 2,000 டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு அரசு நிதி வழங்கி வரும் நிலையில், ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், தவறினால் சஸ்பெண்ட் உள்ளிட்ட கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
