Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழக அரசின் இலவச மிதிவண்டி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சைக்கிள்களை அரசுப் பள்ளி மாணவர்கள் பழைய இரும்புக் கடைகளில் விற்ற அதிர்ச்சி சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழக அரசு வழங்கிய இலவச மிதிவண்டிகளைப் பயன்படுத்தாமல், சில மாணவர்கள் அவற்றை ஆதரவற்ற நிலையில் பழைய இரும்புக் கடைகளில் மிகக் குறைந்த விலைக்கு விற்றதாகக் கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்கள் தரம் குறைவாக இருப்பதாகவும், அவை பழுதடைந்தால் பழுதுபார்க்க அதிக பணம் செலவாகிறது என்றும் கூறப்படுகிறது. இதனால், சில மாணவர்கள் சைக்கிள்களை விற்று, கிடைக்கும் பணத்தை தங்களது சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் இவ்வாறு முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவது வேதனையளிப்பதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இலவசத் திட்டங்களை அனைவருக்கும் வழங்குவதற்குப் பதிலாக, உண்மையிலேயே சைக்கிள் தேவைப்படும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் போக்குவரத்து வசதிக்காகக் கொண்டுவரப்பட்ட இந்த இலவச மிதிவண்டித் திட்டம், நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் முறையற்ற பயன்பாட்டிற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  ”25 பேரு எங்க?".. கையும் களவுமாக சிக்கிய சத்துணவு அதிகாரி! பயந்து நடுங்காமல் முறைத்த அதிர்ச்சி வீடியோ!

நீலகிரியில் அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மிதிவண்டிகளை மாணவர்கள் பெற்ற சிறிது காலத்திலேயே பழைய இரும்புக் கடைகளில் விற்றுவிடும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டதே இந்த இலவச மிதிவண்டித் திட்டமாகும்.

ஆனால், நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் சாலைகள் செங்குத்தாகவும், மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவும் இருப்பதால், மாணவர்களால் மிதிவண்டிகளை எளிதாகப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. அதுமட்டுமின்றி, பள்ளியில் இருந்து சைக்கிளை வீட்டுக்குக் கொண்டு செல்ல ஆட்டோ போன்ற வாகனங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காக ஒரு சைக்கிளுக்கு ரூ.600 முதல் ரூ.700 வரை கூடுதல் செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Republic Tamil

இதனால், சைக்கிளை வீட்டுக்குக் கொண்டு செல்வதற்கே அதிக பணம் செலவாகும் நிலையில், அதற்குப் பதிலாக சைக்கிளை பழைய இரும்புக் கடைகளில் விற்றுவிடுவதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தொலைதூர கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்தப் பிரச்சினை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒருவர் கூறுகையில், “சைக்கிளை கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்குக் கொண்டு சென்று சேர்ப்பதற்கே ஒரு சைக்கிளுக்கு ரூ.600 முதல் ரூ.700 வரை கேட்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், அவ்வளவு பணம் கொடுத்து சைக்கிளை வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியுமா என்ற நிலை ஏற்படுகிறது. இதனால், பலர் சைக்கிள்களை பழைய இரும்புக் கடைகளில் போட்டுவிடுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "சொல்லிப் பார்த்தாங்க கேட்கல.. அப்புறம் நடந்ததே வேற லெவல்! கடலூர் அரசுப் பள்ளியில் அதிரடி!"

இதனால், மலை மாவட்டங்களில் மாணவர்களுக்கு சைக்கிளுக்குப் பதிலாக ரெயின்கோட், காலணி, ஸ்வெட்டர், குடை போன்ற மாணவர்களுக்குப் பயன்படும் பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பயனடைவதுடன், அரசின் நிதி வீணாவதையும் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “சைக்கிள் வழங்குவதற்குப் பதிலாக நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு தரமான ரெயின்கோட் வழங்கலாம். மழையில் புத்தகங்கள் நனையாமல் பாதுகாக்கும் வகையில் ரெயின்கோட், தண்ணீர் புகாத காலணி, நல்ல தொப்பி போன்ற மாணவர்களுக்குப் பயனுள்ள பொருட்களை வழங்கினால் நீலகிரி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

மலை மாவட்டங்களில் அரசின் விலையில்லா மிதிவண்டிகளுக்குப் பதிலாக மழைக்கால உபகரணங்களை வழங்க வேண்டும் என பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 13,571 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  திண்ணையில் தூங்கிய சிறுமி.. கிணற்றில் சடலம்! 5 வயது சிறுமியின் மர்ம மரணம்..!!

இருப்பினும், செங்குத்தான மலைச்சாலைகள் மற்றும் மேடு பள்ளங்கள் காரணமாக மாணவர்களால் இந்த மிதிவண்டிகளை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. சமவெளிப் பகுதிகளில் சைக்கிள்களை எளிதாக ஓட்டிச் செல்ல முடியும். ஆனால், நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் சைக்கிள் ஓட்டுவது மாணவர்களுக்கு சிரமமாக இருப்பதாக பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஒருவர் கூறுகையில், “எல்லா ஊர்களிலும் சைக்கிள் வழங்கும்போது, சமவெளிப் பகுதிகளில் மாணவர்கள் சைக்கிளை எளிதாக ஓட்டிச் செல்ல முடியும். ஆனால், நீலகிரியைப் பொறுத்தவரை பெரும்பாலான பகுதிகள் மேடும் பள்ளமும் நிறைந்த மலைப்பகுதிகளாக உள்ளன. இந்தப் பகுதிகளில் சைக்கிளை வேகமாக ஓட்டவும் முடியாது; சில இடங்களில் எடுத்துச் செல்வதும் சிரமமாக உள்ளது. இதனால் மாணவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்” என்றார்.

எனவே, நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் மாணவர்களுக்கு சைக்கிளுக்குப் பதிலாக ரெயின்கோட், குடை, தண்ணீர் புகாத காலணி, ஸ்வெட்டர் உள்ளிட்ட மழைக்கால மற்றும் குளிர்கால பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.

மாணவர்களின் உண்மையான தேவையை கருத்தில் கொண்டு நலத்திட்டப் பொருட்களை வழங்கினால், அரசின் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதுடன், மாணவர்களும் அதனால் முழுமையாகப் பயனடைவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago