ஐரோப்பிய மண்ணில் அமெரிக்கா விரித்துள்ள இராணுவ வலையமைப்பு இன்று நேற்றல்ல, இரண்டாம் உலகப் போர்க் காலத்திலிருந்தே வலுவாக உள்ளது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. ஈரான் விவகாரம், பாதுகாப்புச் செலவுகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோருக்கு இடையே காரசாரமான மோதல் வெடித்துள்ளது. இதனால், ஜெர்மனியிலிருந்து 5,000 வீரர்களைத் திரும்பப் பெற அமெரிக்கா அதிரடியாக முடிவெடுத்துள்ளது.

ஏன் இந்த திடீர் மாற்றம்?

“எங்கள் காசில் நீங்கள் ஏன் பாதுகாப்பு தேடிக்கொள்ள வேண்டும்?”- இதுதான் அமெரிக்காவின் தற்போதைய கேள்வி. ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்புப் பொறுப்பைச் சரியாக ஏற்கவில்லை என்றும், ஈரான் போன்ற சர்வதேச விவகாரங்களில் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அமெரிக்கா பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறது. இந்த அதிருப்தியே அமெரிக்காவின் தற்போதைய வியூக மாற்றத்திற்கு முக்கியக் காரணம்.

ஐரோப்பாவில் அமெரிக்காவின் பலம் என்ன?

2025 டிசம்பர் நிலவரப்படி, சுமார் 68,000 அமெரிக்க வீரர்கள் ஐரோப்பாவில் நிரந்தரமாக முகாமிட்டுள்ளனர். இது வெறும் கணக்கு மட்டுமே; பயிற்சிகளுக்காக வந்து செல்லும் தற்காலிக வீரர்களைச் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும். இந்த ஒட்டுமொத்தப் படையையும் அமெரிக்க ஐரோப்பிய கட்டளை அமைப்பு வழிநடத்துகிறது. தரைப்படை முதல் விண்வெளிப் படை வரை அத்தனையையும் உள்ளடக்கிய இந்த அமைப்பு, நேட்டோ நாடுகளுடன் இணைந்துச் செயல்படுகிறது.

அமெரிக்கா ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்திருந்தாலும், அதன் பிரதான பலம் ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில்தான் உள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய கோட்டையாக ஜெர்மனி திகழ்கிறது. குறிப்பாக 1952 முதல் செயல்படும் ராம்ஸ்டீன் விமானத் தளம் ஐரோப்பாவின் இதயப்பகுதியாகக் கருதப்படுகிறது. இங்கு 36,436 வீரர்கள், 5 முக்கிய தளங்கள் உள்ளன.

இத்தாலியில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் விசென்சா, நேபிள்ஸ் போன்ற இடங்களில் 12,662 வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் மூன்று தளங்களில் 10,156 வீரர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வான்வழித் தாக்குதலில் வல்லமை பெற்ற விமானப்படையினர்.

கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. ஸ்பெயினில் 3,814 வீரர்களும் போலந்தில் நிரந்தரமாக 369 பேர் மட்டுமே இருந்தாலும், சுழற்சி முறையில் சுமார் 10,000 வீரர்கள் எப்போதும் தயாராக உள்ளனர்.

ருமேனியாவில் 153 நிரந்தர வீரர்கள் மற்றும் மிக முக்கியமான ஏவுகணைப் பாதுகாப்புத் தளங்களும் உள்ளன. ஹங்கேரியில்77 வீரர்கள் பயிற்சிக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சுருக்கமாகச் சொன்னால் ஐரோப்பாவைப் பாதுகாப்பது போலத் தெரிந்தாலும், அமெரிக்கா அங்கு தனது உலகளாவிய அதிகாரத்தைத் தக்கவைக்கவே இத்தனை ஆயிரம் வீரர்களைக் குவித்து வைத்துள்ளது. ஆனால், இப்போது எழுந்துள்ள அரசியல் பிணக்குகள், இந்த நீண்டகால இராணுவப் பிணைப்பில் பெரிய விரிசலை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *