தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், கேமரா முன் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், கேமராவுக்கு பின்னால் வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தனது பல்துறை திறமைகள், திட்டமிட்ட முதலீடுகள் மற்றும் வணிகப் பார்வையின் மூலம், திரைத்துறையைத் தாண்டியும் தனது செல்வாக்கை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள தனுஷ், சமீபத்தில் தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடினார். தமிழ் சினிமாவைத் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவிலும் தனது நடிப்புத் திறமையால் கவனம் ஈர்த்துள்ள அவர், இன்று இந்திய சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.
2002-ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தனுஷ், ஆரம்ப காலத்தில் தனது உடல் தோற்றம் குறித்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால், ‘காதல் கொண்டேன்’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பிறகு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் மாபெரும் வெற்றி பெற்று, தனுஷை தேசிய அளவில் கவனிக்கப்படும் நடிகராக உயர்த்தின.
நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர் என பல்வேறு துறைகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இயக்கம், பாடல் எழுதுதல், பின்னணிப் பாடுதல் உள்ளிட்ட பல வழிகளில் வருவாய் ஈட்டி வரும் அவர், ஒரு ‘ஒன் மேன் ஆர்மி’ என ரசிகர்களால் பாராட்டப்படுகிறார்.
தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க ₹20 கோடி முதல் ₹35 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. பல்வேறு வருவாய் ஆதாரங்களின் மூலம், அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ₹230 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வண்டர்பார் பிலிம்ஸ் – வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனம்
2010-ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து ‘வண்டர்பார் பிலிம்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினர். ஹாலிவுட் திரைப்படமான ‘Inglourious Basterds’ படத்தில் இடம்பெற்ற ‘Wunderbar’ என்ற ஜெர்மன் வார்த்தை, அதற்கு ‘அற்புதம்’ என்ற பொருள் இருப்பது ஆகியவை இந்த நிறுவனத்தின் பெயராக தேர்வு செய்ய காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் மூலம் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘வடசென்னை’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளன.
தனுஷ் குளோபல் வென்சர்ஸ் – கார்ப்பரேட் முதலீட்டு நிறுவனம்
திரைப்படத் தயாரிப்பைத் தாண்டி, ‘Dhanush Global Ventures Private Limited’ என்ற முதலீட்டு நிறுவனத்தையும் தனுஷ் நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம் பல்வேறு கார்ப்பரேட் வணிகச் சேவைகள், கூட்டு முதலீடுகள் மற்றும் நிதி முதலீடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சினிமா சாராத பல துறைகளில் முதலீடு செய்வதற்காகவே இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சந்தை ஆய்வு நிறுவனமான Tracxn வெளியிட்ட தகவலின்படி, இந்த நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் கார்ப்பரேட் ஒப்பந்தங்கள் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ரியல் எஸ்டேட்டில் கோடிக்கணக்கான முதலீடு

தனுஷ் தனது வருமானத்தின் பெரும்பகுதியை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருகிறார். சென்னையின் போயஸ் கார்டனில், சுமார் ₹150 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களாவை அவர் கட்டியுள்ளார். அதே பகுதியில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் இல்லங்களும் அமைந்துள்ளன.
இதுதவிர, ஆழ்வார்பேட்டையில் சுமார் ₹18 கோடி மதிப்பிலான மற்றொரு சொத்து இருப்பதாகவும், மேலும் பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் உயர்தர குடியிருப்பு மற்றும் வணிக ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சொகுசு கார் சேகரிப்பு

கார்கள் மீது தனுஷுக்கு தனி ஆர்வம் உள்ளது. அவரது கார் சேகரிப்பில் ₹6 கோடிக்கும் அதிக மதிப்புள்ள Rolls-Royce Ghost, Jaguar XE, Mercedes-Benz S-Class, Range Rover Sport HSE, Ford Mustang உள்ளிட்ட பல சொகுசு கார்கள் இடம்பெற்றுள்ளன.
சினிமாவைத் தாண்டி வெற்றிகரமான தொழிலதிபர்

சினிமா பின்னணி இருந்தாலும், தனது தனிப்பட்ட திறமை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் தனுஷ்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தபோதிலும், அவற்றைத் தாண்டி தொடர்ந்து தனது வெற்றிப் பயணத்தை முன்னெடுத்து வருகிறார்.
நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், தொழிலதிபர், முதலீட்டாளர் என பல்வேறு துறைகளில் சாதித்து வரும் தனுஷ், இன்று பல இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையின் அடையாளமாகவும், கடின உழைப்பின் மூலம் வெற்றியை அடைய முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார்.
