Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

மைசூரிலிருந்து சென்னை நோக்கி இயக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயிலில் (வண்டி எண்: 20608) பயணித்த ஒருவருக்கு வழங்கப்பட்ட மசால் வடைக்குள் ‘ஃபெவி க்விக்’ (Fevikwik) உடனடி ஒட்டும் பசை குப்பி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

சென்னை கொளத்தூர் (கதிர்வேடு) பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர் டி. சேகர், மைசூருக்குச் சென்று திரும்பும் வழியில் வந்தே பாரத் விரைவு ரயிலில் சென்னை நோக்கி பயணம் செய்தார்.

Republic Tamil

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26, 2026) மதியம் சுமார் 3 மணியளவில், ரயிலில் சிற்றுண்டியாக மசால் வடை வழங்கப்பட்டது. அந்த வடையை சாப்பிடத் தொடங்கிய சேகர், அதை கடித்தபோது அதன் உள்ளே இருந்த ‘ஃபெவி க்விக்’ குப்பி வெடித்து, அதிலிருந்த பசை அவரது வாயில் ஒட்டியதாகக் கூறப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக, உடனடியாக அது உணவுப் பொருள் அல்ல என்பதை உணர்ந்த அவர், வாயிலிருந்த பசையைத் துப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சிறிது நேரம் தாமதமாக கவனித்திருந்தால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "பிரதமரை திட்டிய பெண்.. அழுதுகொண்டே கேட்ட மன்னிப்பு! மோடி செய்த நெகிழ்ச்சியான காரியம்!"

இதையடுத்து, சம்பவம் குறித்து அவர் உடனடியாக ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் (TTE) புகார் அளித்தார். பின்னர் ரயில் உணவக மேலாளர் நேரில் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட கேட்டரிங் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

மேலும், சேகர் எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சக பயணிகளும் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவு விநியோக ஒப்பந்ததாரருக்கு கடுமையான அபராதம் விதித்துள்ளது.

மேலும், உணவு தயாரிப்பு மற்றும் பொதி செய்யும் பணிகளில் உயர்ந்த தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், இனி இதுபோன்ற அலட்சியம் மீண்டும் நிகழக்கூடாது என்றும் ஒப்பந்ததாரருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தெற்கு ரயில்வே மற்றும் தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க  அமெரிக்க தாக்குதலில் சிதைந்த இந்தியக் கப்பல்..! இந்தியர்கள் மீதான தாக்குதலால் வெடித்த ராஜதந்திரப் போர்..! மோடி அரசு அதிரடி..!

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சேகர் கூறுகையில், “வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவுக்காக பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு ஏற்ற தரமும், பாதுகாப்பும் உணவில் இல்லை. இதுபோன்ற அலட்சியம் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

வந்தே பாரத் போன்ற பிரீமியம் ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஏற்கனவே பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுந்து வரும் நிலையில், மசால் வடைக்குள் ‘ஃபெவி க்விக்’ குப்பி இருந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், ரயில்வே உணவு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago