Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவனை அடித்ததாகவும், இந்த சம்பவம் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மாணவனின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மாணவனுக்கு ஏற்பட்ட காயங்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் தனது மகன் தொடர்பாக, அவரது தாயார் சுமதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“என் பெயர் சுமதி. என் மகன் அஸ்தினாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது மகனை ஆசிரியர்கள் அடித்தனர். அதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. அப்போது பள்ளிக்குச் சென்று புகார் அளித்தோம். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.”

“தற்போதும் மீண்டும் எனது மகனை தாக்கியுள்ளனர். அதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. இதுகுறித்து தலைமை ஆசிரியரை சந்தித்து புகார் அளிக்க முயன்றோம். ஆனால், அவர் அப்போது பள்ளியில் இல்லை. குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததால், நாங்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம்.” என்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், அதன்படி காவல் நிலையத்துக்குச் சென்று முறையாக புகார் அளித்ததாகவும் சுமதி தெரிவித்தார்.

இதையும் படியுங்க  "அடிக்கு அடி! போலீஸை நடுரோட்டில் அடித்த இளைஞர்! நியாயமா? அராஜகமா? - தஞ்சை அதிரடி பின்னணி!"

“நாங்கள் எந்த பிரச்சினையும் செய்யாமல், காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தோம். கடந்த 21-ஆம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் காவல் நிலையத்தில் இருந்து புகார் கொடுத்தோம். ஆனால், இதுவரை எங்களை அழைத்து விசாரணை நடத்தவில்லை.” என்று அவர் கூறினார்.

மேலும், காவல்துறை அதிகாரியிடம் தானே தொடர்புகொண்டு புகார் குறித்து கேட்டதாகவும், அப்போது விசாரணை நடத்துவதாக தெரிவித்ததாகவும் கூறினார்.

“அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் நான் தொடர்புகொண்டு கேட்டபோது, பள்ளியில் விசாரித்ததாகவும், பெரிதாக எதுவும் இல்லை, கண்டித்துவிட்டு விட்டதாகவும் கூறினார்கள். முடி வெட்டியதற்காக எனது மகனை கண்டித்ததாக மட்டும் தெரிவித்தனர். ஆனால், குழந்தையை அடிப்பதற்கு அது காரணமாக இருக்க முடியாது.” என்றார்.

புகார் அளித்து மூன்று நாட்கள் ஆகியும் காவல்துறை தரப்பில் இருந்து தங்களை அழைத்து பேசவில்லை என்றும், பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை (CCTV Footage) கேட்டும் இதுவரை வழங்கவில்லை என்றும் சுமதி குற்றம்சாட்டினார்.

“நாங்கள் பள்ளிக்கு வந்து சிசிடிவி காட்சிகளை கேட்டோம். அதை எடுத்துக் கொடுக்கவில்லை. இப்போது தருகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், இதுவரை எதுவும் வழங்கப்படவில்லை.” என்றார். மேலும், இதுபோன்று பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல பெற்றோர்கள் தங்களிடம் வந்து வேதனையை பகிர்ந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்க  நிமிட இடைவெளியில் பிரிந்த இரு உயிர்கள்… வத்தலகுண்டை உலுக்கிய நிஜக் காதல் கதை!

“இதேபோன்று நிறைய மாணவர்களை அவர்கள் அடித்துள்ளனர். எங்களுடைய ஒரே கோரிக்கை, தலைமை ஆசிரியரை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்பதுதான். சிசிடிவி காட்சிகளை வழங்க வேண்டும். அதைப் பார்த்த பிறகு, இனிமேல் மாணவர்களை அடிக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என்று கேட்கிறோம்.” என்றார்.

தலைமை ஆசிரியர் இதுவரை நேரில் வந்து விளக்கம் அளிக்கவில்லை என்றும், பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்கள் மட்டுமே பெற்றோர்களிடம் பேசி வருவதாகவும் சுமதி கூறினார்.

“குழந்தைகளை கண்டிக்கலாம். அவர்கள் தவறு செய்தால் தண்டிக்கலாம். ஆனால், உடலில் வீக்கம் ஏற்படும் அளவுக்கும், காயம் ஏற்படும் அளவுக்கும் அடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது குழந்தைகளின் மனநிலையையும் உடல்நலத்தையும் பாதிக்கிறது.” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

மாணவனின் உடலில் ஏற்பட்ட காயங்கள் குறித்து சுமதி கூறுகையில், தலைமை ஆசிரியர் தனது மகனை கம்பியால் அடித்ததாக குற்றம்சாட்டினார்.

“என் மகனின் முதுகு, கை உள்ளிட்ட பல இடங்களில் காயங்கள் உள்ளன. கன்னத்திலும் தாக்கியுள்ளனர். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. தேர்வு முடிந்து பிரார்த்தனை நேரத்தில், 102 டிகிரி காய்ச்சலுடன் பள்ளிக்கு வந்திருந்த எனது மகனை அனைவரின் முன்னிலையிலும் அடித்துள்ளனர்.” என்றார்.

இதையும் படியுங்க  "தமிழ்நாட்டில் தடையை மீறி பகல் கொள்ளை! தருமபுரியில் QR கோடு காட்டி விக்கப்படும் கள்ள லாட்டரி... 

மேலும், இந்த சம்பவத்துக்குப் பிறகு தனது மகன் பள்ளிக்குச் செல்லவே பயப்படுவதாகவும், பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என்று கூறுவதாகவும் தெரிவித்தார்.

“என் மகன் இப்போது பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று கூறுகிறான். அவனுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உடல்நலப் பிரச்சினை இருப்பதாக கடந்த ஆண்டு பள்ளிக்கு கடிதம் கொடுத்திருந்தோம். அதையும் மீறி தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.” என்றார்.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக புகார் அளித்த போதெல்லாம் தலைமை ஆசிரியர் நேரில் வந்து பேசவில்லை என்றும், கீழ்நிலை பணியாளர்கள் மட்டுமே பெற்றோர்களிடம் பேசி சமாளிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

“நாங்கள் நியாயமான கேள்வியைத்தான் கேட்கிறோம். மாணவர்களை அடிக்க மாட்டோம் என்று ஒரு எழுத்துப்பூர்வமான உறுதிமொழி கொடுக்க ஏன் தயங்குகிறார்கள்? குழந்தைகளை ஒழுக்கப்படுத்தலாம். ஆனால், அவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பு ஏற்படும் வகையில் தண்டிக்கக் கூடாது.” என்று சுமதி தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை மற்றும் காவல்துறை உரிய விசாரணை நடத்தி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago