Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vanni Arasu

அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள் அனைத்தும் தற்காலிகமானவை என்றும், ‘விடுதலைச் சிறுத்தைகள்’ என்ற அடையாளமும் சாதி ஒழிப்புக்கான களப்பணியுமே தனக்கு நிரந்தரமானவை என்றும் தமிழக சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தனது கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்றைக்கே அழைத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருமாறு கூறினால், ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் பதவியைத் துறந்து வெளியேறத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

“எம்.எல்.ஏ., எம்.பி. அல்லது அமைச்சராக வேண்டும் என்பதற்காக நான் இந்த இயக்கத்திற்கு வரவில்லை. அன்று தலைவர் திருமாவளவன், ‘வாய்க்கரிசி போட்டுக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் சிறைக்குச் செல்லத் தயாராக இருப்பவர்கள் மட்டும் வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார். அந்தக் கொள்கைக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இயக்கத்திற்கு வந்தவன் தான் இந்த வன்னி அரசு” என்று தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

அமைச்சர் பதவியா, சாதி ஒழிப்புக் களமா என்ற கேள்வி வந்தால், எப்போதும் சாதி ஒழிப்புக் களமே தனது முதன்மையானது என்றும், அமைச்சர் பதவி அதற்கு அடுத்தபடியானதுதான் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். பதவிகளைவிட மக்கள் பணியும் கொள்கை உறுதியுமே தனக்கு முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

எளிய கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்து அமைச்சராக உயர்ந்திருந்தாலும், தனது அடிப்படை அரசியல் கொள்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் வன்னி அரசு கூறினார்.

இதையும் படியுங்க  “CM ஆன பிறகு முதல் டெல்லி பயணம்.. அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்க்கும் விஜய்!”

தனது கடந்த கால வாழ்க்கையை நினைவுகூர்ந்த அவர், “எங்கள் கிராமத்தில் நான் அமைச்சராகும் வரை பேருந்து வசதியே இல்லை. 80 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பேருந்து வசதி செய்து தந்துள்ளேன். அதற்கு முன்பு கிராமத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது” என்றார். “ஊருக்கு ஒரு பேருந்து விடுவதற்கே நான் அமைச்சராக வேண்டியிருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாதி மோதல்களால் எரிக்கப்பட்ட குடிசைகளின் சாம்பலில் இருந்து உருவானவன் தான் இந்த வன்னி அரசு என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடவே அரசியலுக்கு வந்ததாகவும் அவர் உருக்கமாகப் பேசினார். அந்த நோக்கத்திற்கு முன்னால் அமைச்சர் பதவி என்பது தற்காலிகமானது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்துள்ள நிலையில், விசிகவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதால், அமைச்சர் பதவிக்காக வன்னி அரசு அந்த அரசைப் புகழ்ந்து பேசுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, தனக்கு பதவி முக்கியமல்ல என்றும் கொள்கையே முக்கியம் என்றும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.

முன்னதாக, வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு பேசிய கருத்துகளைத் தொடர்ந்து, “அமைச்சர் நாற்காலிக்காகக் கொள்கைகளை மாற்றிக் கொள்ளலாமா?” என திமுக முன்னாள் அமைச்சர் கோவி. செழியன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். அதற்குப் பதிலளிக்கும் வகையிலும் வன்னி அரசின் தற்போதைய பேச்சு அமைந்துள்ளது.

இதையும் படியுங்க  சிறையில் நடந்த கொடூர அனுபவங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி கிளப்பிய அமைச்சர் வன்னி அரசு!

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் வன்னி அரசின் காரை காட்டுவன்னஞ்சூர் கிராம மக்கள் திடீரென வழிமறித்து முற்றுகையிட்டனர். திமுக ஆட்சிக் காலத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்கள் கண்ணீர் மல்க அமைச்சரிடம் மனு அளித்தனர்.

காரில் இருந்து இறங்கி பொதுமக்களின் மனுக்களைப் பெற்றுக்கொண்ட வன்னி அரசு, அதிகாரிகளுடன் பேசி பிரச்சினைக்கு உரிய தற்காலிக மற்றும் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அதே நிகழ்ச்சியில் மனு அளிக்க வந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர், மேடையின் கீழே அமர முயன்றனர். இதைக் கவனித்த அமைச்சர், அவர்களைத் தடுத்து, “மேலே வாங்கம்மா, வந்து சேர்ல உக்காருங்க” என்று கூறி மேடையில் இருந்த நாற்காலிகளில் அமர வைத்தார். இந்தச் சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Vanniyarasu

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வன்னி அரசு, பெண்களை உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் எந்தவிதமான துன்புறுத்தலுக்கும் ஆளாக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் தனி சமூக நீதித் துறைக்கு முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பதாகவும் வன்னி அரசு தனது உரையில் குறிப்பிட்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையுடன் இணைந்து, சமூக நீதிக்கான தனி அமைச்சகத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 47 ஆண்டுகால கோரிக்கையாக இருந்த சமூக நீதித் துறைக்குத் தலைமை தாங்குவதால், தனது கொள்கைப் பற்றை வன்னி அரசு அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

இதையும் படியுங்க  முதல்வராகும் எடப்பாடியார்..! விட்டுக் கொடுக்கும் தவெக..? விஜய் சார்.. கால் பத்திரம்..!

வன்னி அரசு திண்டிவனம் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவருக்காகப் பிரசாரம் செய்தார். இதற்குச் சமீபத்தில் நன்றி தெரிவித்த வன்னி அரசு, அதேவேளையில் விசிக தலைவர் தொல். திருமாவளவனின் தேர்தல் உழைப்புக்காக எந்தவொரு திமுக தலைவரும் நன்றி தெரிவிக்கவில்லை என்ற தனது அரசியல் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். உதயநிதி ஸ்டாலின், திருமாவளவனை தனது “அரசியல் வழிகாட்டி” எனக் குறிப்பிட்டிருந்ததும் இந்த அரசியல் பின்னணியில் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

இதனிடையே, கள்ளக்குறிச்சியில் வன்னி அரசு பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கூட்டணி மற்றும் அமைச்சர் பதவி காரணமாக தவெக அரசை விமர்சிக்காமல் பதவிக்காக வளைந்து கொடுப்பதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், “நாங்கள் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் அல்ல; தலைவர் சொன்னால் இப்போதே ராஜினாமா செய்வோம்” என்று வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago