https://republictn.com/

திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன், அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1980களிலிருந்து தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராகவும் விநியோகத்தராகவும் செயல்பட்டு வந்த இவர், யூடியூப் சேனல்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்று தனது கருத்துகளை வெளிப்படையாக கூறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வண்ணாரப்பேட்டையிலிருந்து தனது காரில் டிரைவருடன் புறப்பட்ட கே. ராஜன், அடையாறு ஆற்றங்கரை அருகே வந்தபோது காரை நிறுத்துமாறு கூறியுள்ளார். பின்னர் சிறிது நேரம் நடைப்பயிற்சி செல்ல வேண்டும் என கூறி காரிலிருந்து இறங்கி சென்ற அவர், பாலம் அருகே திடீரென ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆற்றிலிருந்து அவரது உடலை மீட்டனர். பின்னர் அடையாளம் காணப்பட்டு, உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், குடும்பத்திலிருந்து பிரிந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அவருக்கு சுமார் 15 கோடி ரூபாய் அளவில் கடன் பிரச்சனை இருந்ததாகவும், இதுவே முக்கிய காரணமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடன் தொல்லை மற்றும் மன அழுத்தம் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அவரது கார் டிரைவர் மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கே.ராஜனுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் மற்றும் மனைவி உள்ளனர். இவர் ராயபுரத்தில் காமராஜர் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளிக்கூடத்தையும் நடத்தி வருகிறார்.

ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து இன்று அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தண்டையார்பேட்டை இ.எம்.ஆர் அடுக்குமாடி குடியிருப்புக்கு கொண்டுவரப்படுகிறது.

சுரேஷ் ராஜன் தொடர்பு எண் 8939490023

இடம் இடம் ஈஎம்ஆர் எக்ஸ்ப்ளைனேட் அப்பார்ட்மெண்ட் டவர் 8, பிளாட் 203, வைத்தியநாதன் தெரு தண்டையார்பேட்டை சென்னை 81.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago