Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, போலீசார் தேநீர் அருந்துவதற்காக வாகனத்தை நிறுத்தியபோது, காவலில் இருந்த கைதி போலீசாரைத் தள்ளிவிட்டு தப்பியோடிய சம்பவம் தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு நாட்களாக ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தாலும், கைதியை இதுவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

தப்பியோடியவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சேர்ந்த நரேஷ் என்கிற நரேஷ் குமார் (35). இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட மொத்தம் 14 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நரேஷ் குமாருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரை மீண்டும் கோவை மத்திய சிறைக்கு போலீசார் பாதுகாப்புடன் வேனில் அழைத்துச் சென்றனர்.

நள்ளிரவு நேரத்தில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சுள்ளிபாளையம் பகுதியில், சேலம்–கோவை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தேநீர் அருந்துவதற்காக வாகனத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  ஆன்லைன் வழியில் போதை வியாபாரம் – தாம்பரத்தில் சிக்கிய மாத்திரை மன்னன்

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய நரேஷ் குமார், காவலில் நின்றிருந்த போலீசாரை பலமாகத் தள்ளிவிட்டு அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பியுள்ளார்.

அவரை விரட்டிச் சென்ற தலைமை காவலர் ஜெகதீசன் கீழே விழுந்ததில், அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெருந்துறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பெருந்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சிவக்குமார் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கைதியைப் பிடிக்க தீவிர தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.

கைதி நரேஷ் குமாரின் மனைவி கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால், அவர் அங்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். மேலும், சேலத்தில் உள்ள அவரது பெற்றோர் வீடு மற்றும் அவர் அடிக்கடி சென்று வந்த இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், சம்பவம் நடந்த ஆறு நாட்களைக் கடந்தும் நரேஷ் குமாரை கைது செய்ய முடியாததால், காவல்துறையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க  மருத்துவத்துறைக்கே களங்கம்..! கிரிமினல்களுடன் சிண்டிகேட்..! சிவகங்கையை உலுக்கும் டாக்டர் மார்கண்டன்..!

இந்த சம்பவத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு மற்றும் அலட்சியம் காரணமாக, பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோவிந்தசாமி, சுப்பிரமணி மற்றும் தலைமை காவலர் ஜெகதீசன் ஆகிய மூவரையும் காவல் ஆணையர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார்.

காவலில் இருந்த கைதி தப்பிச் சென்ற சம்பவமும், பல நாட்கள் கடந்தும் அவரை கைது செய்ய முடியாத நிலையும், தமிழக காவல்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago