அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் கழுத்தில் ஏற்பட்ட நரம்பு பாதிப்புக்கு நடிகை ஷகிலா ரூ.3 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். படுக்கையில் தவறான நிலையில் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதே தனது உடல்நலப் பாதிப்புக்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் நடிகை ஷகிலா, தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில், தனக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பு மற்றும் அறுவை சிகிச்சை குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
அதில், தான் படுக்கையில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு தொடர்ந்து செல்போனில் ஆன்லைன் கேம்களை விளையாடி வந்ததாக ஷகிலா தெரிவித்துள்ளார். தினமும் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே நிலையில் படுத்துக்கொண்டு கேம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், தேநீர் அல்லது காபி அருந்துவதற்காக மட்டும் எழுந்து மீண்டும் அதே நிலையில் செல்போனைப் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
ஆன்லைன் கேம்களை விளையாடிய பிறகு, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் உள்ளிட்ட காணொளிகளை பல மணி நேரம் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். நீண்ட நேரம் தவறான உடல் நிலையில் செல்போனைப் பயன்படுத்தியதன் காரணமாக கழுத்தில் ஏற்பட்ட பாதிப்பு, இறுதியில் அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தன்னை கொண்டு சென்றதாக ஷகிலா கூறியுள்ளார்.
இதையடுத்து, சென்னை மேட்வே மருத்துவமனையில் அவருக்கு ரூ.3 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது கழுத்துப்பட்டை அணிந்து ஓய்வெடுத்து வரும் ஷகிலா, படுக்கையில் இருந்து எழுவது, உணவு உட்கொள்வது உள்ளிட்ட அன்றாட பணிகளுக்குக்கூட மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும், செல்போன் மிகவும் பயனுள்ள சாதனம் என்றாலும், அதனை தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது என அவர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, தேவையில்லாத காணொளிகளைப் பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும், அத்தியாவசியமான விஷயங்களுக்கு மட்டுமே செல்போனைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனது நிலைமை பெரியவர்களுக்கே ஏற்பட்டுள்ள நிலையில், எப்போதும் செல்போன் மற்றும் பிற கேஜெட்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் குழந்தைகளின் நிலை என்னவாகும் எனவும் ஷகிலா கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, குழந்தைகளுக்கு செல்போன் மற்றும் பிற மின்னணு சாதனங்களை வழங்குவதில் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், குழந்தைகள் அவற்றை அதிக நேரம் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தனது விழிப்புணர்வு வீடியோவில் நகைச்சுவையையும் கலந்து பேசிய ஷகிலா, “செல்போனில் தேவையில்லாத வீடியோக்களைப் பார்த்து நேரத்தை வீணடிக்காதீர்கள்” என அறிவுறுத்தியதுடன், “என்னுடைய வீடியோக்களைக் கூட அதிக நேரம் பார்க்காதீர்கள்” என தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேவையற்ற காணொளிகளைப் பார்ப்பதைத் தவிர்த்து, பயனுள்ள விஷயங்களுக்கு மட்டுமே செல்போனைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையெனில், தன்னைப் போன்று உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொண்டு, அதிக செலவு செய்து சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
செல்போன் பயன்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது மற்றும் நீண்ட நேரம் தவறான உடல் நிலையில் அதைப் பயன்படுத்துவது குறித்து தனது சொந்த அனுபவத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள ஷகிலா, பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டிலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
