Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடி மீனவ கிராமத்தில், மதுப் பழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், ஊர் பஞ்சாயத்தார்கள் சார்பில் பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இளைஞர்களிடையே மதுப் பழக்கத்தைத் தடுப்பதுடன், குடும்பத் தகராறுகளைக் குறைத்து, கிராமத்தில் அமைதியான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேனரில், “மதுவை ஒழிப்போம்… மக்களைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறி மது அருந்துவது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமணமானவர்கள் மது அருந்திவிட்டு வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தகராறில் ஈடுபட்டு, அது தொடர்பாக ஊர் பஞ்சாயத்தாரிடம் புகார் வந்தால், அவர்களுக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கிராமத்தில் யாரேனும் ரகசியமாக மது அருந்துவது தெரியவந்தால், அது குறித்து தகுந்த ஆதாரத்துடன் ஊர் தலைவர்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு உண்மையான தகவலை ஆதாரத்துடன் தெரிவிக்கும் நபர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கிராம நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்க  பாட்டி வீட்டில் நடந்த கொடூரம்? சிறுவன் முகிலன் மரணத்திற்கு நரபலி காரணமா?
Republic Tamil

இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து சுமார் 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், கிராமத்தில் குடும்பத் தகராறுகள் குறைந்து, அமைதியான சூழல் நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் இளம் வயதிலேயே மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி தங்களது எதிர்காலத்தை வீணாக்குவதைத் தடுப்பதும், மதுவால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதும், கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றுவதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என ஊர் பஞ்சாயத்தார்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “நமது கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் நலன், பொது சுகாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 2026 முதல் ஊரில் திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “இன்றைய சரியான முடிவு, நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும். மதுவைத் தவிர்ப்போம்; நம் எதிர்கால வாழ்க்கையையும், நம் சமுதாயத்தையும் பாதுகாப்போம்” எனவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விழுந்தமாவடி கிராம மக்கள் மதுவுக்கு எதிராக எடுத்துள்ள இந்த நடவடிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இளைஞர்களின் நலன், குடும்ப அமைதி மற்றும் சமூக ஒழுக்கத்தை கருத்தில் கொண்டு கிராம மக்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க  ஐஸ் கட்டியில் 150 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த சிறுவர்கள்!
Republic Tamil

இதேபோன்று, சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் உள்ள மெட்கி (Medki) கிராமத்திலும் மதுவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு மது அருந்துவதற்கும், பொது இடங்களில் மதுவை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கிராமக் குழு அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மதுப் பழக்கத்திற்கு எதிராக விழுந்தமாவடி கிராம மக்கள் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago