இந்தோனேசியாவைச் சேர்ந்த அரிய வகை மனிதக் குரங்கான ‘லார் கிப்பன்’ (Lar Gibbon) உடன் நடிகர் விக்ரம் கொஞ்சி விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது தற்போது சட்டப்பூர்வ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரிய வகை விலங்குகளை உரிய அனுமதியின்றி வைத்திருப்பது சட்டவிரோதம் என்பதால், தமிழ்நாடு வனத்துறையினர் இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ‘சீயான்’ விக்ரம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி குரங்கு ஒன்றுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை அண்மையில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், குரங்கு அவரது தலைமுடியைப் பிடித்து விளையாடும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
அரிய வகை ‘லார் கிப்பன்’ என அடையாளம்

விக்ரம் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், விலங்கு ஆர்வலர்கள் அந்த வீடியோவில் இருப்பது இந்தியாவில் காணப்படும் சாதாரண குரங்கு அல்ல என்றும், தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட அரிய வகை மனிதக் குரங்கான ‘லார் கிப்பன்’ என்றும் அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த இனம் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதுடன், சர்வதேச அளவிலும் அதிக பாதுகாப்பு தேவைப்படும் விலங்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் குரங்கு
வனத்துறையின் முதற்கட்ட விசாரணையில் கிடைத்ததாகக் கூறப்படும் தகவலின்படி, இந்த அரிய வகை குரங்கு தென்கிழக்கு ஆசியாவில் இருந்து சர்வதேச கடத்தல் கும்பல் மூலம் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முதலில் மணிப்பூருக்குக் கொண்டு வரப்பட்ட இந்தக் குரங்குகள், அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த எஸ்.கே. கேசவநாதன் என்பவரிடம் கைமாறியதாகக் கூறப்படுகிறது.
அவரிடம் 3 குரங்கு குட்டிகள் இருந்ததாகவும், அவற்றில் ஒன்றுதான் சென்னையில் உள்ள சி.கே. ரங்கநாதனின் இஞ்சம்பாக்கம் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சி.கே. ரங்கநாதன், சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் CavinKare நிறுவனத்தின் நிறுவனருமானவர். அவர் நடிகர் விக்ரமின் சம்மந்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.
விக்ரம் வீடியோ வெளியிட்டது எப்படி?

சி.கே. ரங்கநாதனின் இல்லத்திற்குச் சென்றபோது, நடிகர் விக்ரம் அந்த அரிய வகை குரங்குடன் விளையாடியதாகவும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் அந்தப் பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
வீடியோ நீக்கப்பட்டபோதிலும், அதன் அடிப்படையில் தமிழ்நாடு வனத்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை இல்லத்தில் வனத்துறையினர் ஆய்வு
இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் சி.கே. ரங்கநாதனின் சென்னை இஞ்சம்பாக்கம் இல்லத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த அரிய வகை விலங்கை இந்தியாவில் வைத்திருப்பதற்கும் வளர்ப்பதற்கும் தேவையான முறையான அனுமதி மற்றும் ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
தற்போதைய தகவலின்படி, அந்தக் குரங்கை வைத்திருப்பதற்கான சட்டபூர்வ ஆவணங்கள் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதால், வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல மாதங்களாக வளர்க்கப்பட்டதா?
விக்ரம் வெளியிட்ட வீடியோவை ஆய்வு செய்த வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள், அதில் இடம்பெற்றுள்ள குரங்கு மிகவும் சிறிய குட்டியாக இல்லை என்றும், ஓரளவு வளர்ந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால், இந்த அரிய வகை குரங்கு அண்மையில் மட்டும் கொண்டு வரப்பட்டதா அல்லது பல மாதங்களாக, ஏன் பல ஆண்டுகளாகவே சென்னையில் சட்டவிரோதமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் கடும் பாதுகாப்பு
‘லார் கிப்பன்’ குரங்குகள் சர்வதேச அளவில் CITES ஒப்பந்தத்தின் Appendix I பிரிவின் கீழ் மிக உயர்ந்த பாதுகாப்பு வளையத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அரிய வெளிநாட்டு விலங்குகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்து வளர்ப்பதற்கு உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.
வெளிநாட்டு விலங்குகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) உள்ளிட்ட துறைகளின் அனுமதிகள், CITES விதிகளின்படி தேவையான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆவணங்கள், மேலும் மாநில தலைமை வனவிலங்கு காப்பாளரின் (Chief Wildlife Warden) உரிய அனுமதி ஆகியவை தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, சி.கே. ரங்கநாதன் தரப்பிடம் இதற்கான சட்டபூர்வ ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்ரமிடமும் விளக்கம் கேட்கப்படுமா?
இந்த விவகாரத்தில் நடிகர் விக்ரம் அந்தக் குரங்கைத் தனிப்பட்ட முறையில் வளர்க்கவில்லை என்றாலும், சட்டவிரோதமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கக்கூடிய அரிய விலங்குடன் இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டது தொடர்பாக அவரிடமும் விளக்கம் கேட்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் CITES விதிகளின் கீழ், பாதுகாக்கப்பட்ட விலங்குகளை சட்டவிரோதமாக வைத்திருப்பது, பயன்படுத்துவது அல்லது அவற்றைச் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பதிவை நீக்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விக்ரம் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
அரிய வகை ‘லார் கிப்பன்’ குரங்கு இந்தியாவுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டது, யார் மூலம் கைமாறியது, சென்னையில் எவ்வளவு காலமாக வளர்க்கப்பட்டது, அதற்கான உரிய ஆவணங்கள் உள்ளனவா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விசாரணையின் முடிவிலேயே, குரங்கு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டதா, அதை வைத்திருந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும், நடிகர் விக்ரமிடம் விளக்கம் பெறப்படுமா என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.
