சட்டப்பேரவையில் நாளை ஒரு தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது. அது தமிழகத்திற்கு உரிய நிதிப் பகிர்வை உறுதி செய்யக் கோரும் தீர்மானமாகும். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்…
பொதுவாக மாநில அரசு, மத்திய அரசிடம் கோரிக்கைகளை முன்வைக்கும். ஆனால் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றி அதன் மூலம் மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பதற்கும், நேரடியாக முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை வைப்பதற்கும் என்ன வித்தியாசம்? நாளை நிறைவேற்றப்படவுள்ள அந்த தனித் தீர்மானம் என்ன?
தமிழக சட்டப்பேரவை நாளை கூடியவுடன், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் அரசின் தனித் தீர்மானத்தை முன்மொழிவார். கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி எந்த நிலுவையும் இன்றி, நியாயமான முறையிலும் சமமான பங்கீட்டுடனும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இந்தத் தீர்மானம் முன்வைக்கப்படுகிறது. அதன் மீதான விவாதமும் நடைபெறும்.
இதற்கான காரணம் என்னவென்றால், மத்திய அரசு வசூலிக்கும் வருவாயில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதிப் பங்கு, உரிய அளவில் வழங்கப்படவில்லை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாகும். தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி மற்றும் சிறந்த நிதி மேலாண்மை ஆகியவற்றில் தமிழ்நாடு முன்னிலை வகித்தாலும், அதற்கேற்ற நிதிப் பங்கீடு கிடைப்பதில்லை என்று அரசு தெரிவிக்கிறது.
இதனை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில், கூட்டாட்சி தத்துவம், சமத்துவம், சம உரிமை, நிதி நியாயம், நல்லாட்சி, நிர்வாகத் திறன் மற்றும் மக்கள் தொகை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிதிப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதேவேளையில், மனிதவள மேம்பாட்டில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதால், அதற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பின் நிதிசார் கூட்டாட்சிக் கொள்கை, சமத்துவம் மற்றும் நியாயம் ஆகியவற்றுக்கு இணங்க, மத்திய அரசு வசூலிக்கும் வருவாயில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதையே இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தமிழக சட்டப்பேரவையில் அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளுடன் நிறைவேற்றப்படும் இந்தத் தீர்மானம், தமிழகத்தின் ஒருமித்த நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக எடுத்துரைக்கும் ஆவணமாக அமையும். இதில், நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய தொகை, தற்போதைய பங்கீட்டு முறை, ஜிஎஸ்டி நிலுவை, மத்திய நிதி ஒதுக்கீட்டில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் வலியுறுத்தப்படும்.
இந்தத் தீர்மானம் மூலம், தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். தீர்மானம் பேரவையில் விவாதிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பின்னர், அது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன் பின்னர், இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு எவ்வாறு செயல்படுகிறது, என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது என்பதன் அடிப்படையில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.
