கீழ்பவானி வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் மூலம் தடப்பள்ளி–அரக்கன்கோட்டை, காளிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால்கள் வழியாக சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில், தடப்பள்ளி–அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் வாய்க்கால்களுக்கு சிறப்புப் பாசனத்திற்காக உயிர்நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் கடந்த ஜூலை 14 முதல் 28ஆம் தேதி வரை, மொத்தம் 15 நாட்கள் திறந்துவிடப்பட்டது.
ஆனால், கீழ்பவானி வாய்க்காலில் மட்டும் நீர் திறக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி, நீர்வள ஆதாரத் துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மறுபுறம், 15,763 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் காளிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்பட்ட உயிர்நீர், கடைமடைப் பகுதி வரை சென்றடையவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் பிற நீராதாரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காளிங்கராயன் பாசன விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, காளிங்கராயன் பாசன விவசாயிகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். வறட்சியைத் தடுக்கும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளிலிருந்து பவானிசாகர் அணைக்கு நீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், தற்போது பவானிசாகர் அணையில் உள்ள 13 டி.எம்.சி. நீரைப் பயன்படுத்தி காளிங்கராயன் மற்றும் கீழ்பவானி பாசனப் பகுதிகளில் உள்ள பயிர்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேநேரத்தில், அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மாநில பட்ஜெட், இப்பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கீழ்பவானி மற்றும் காளிங்கராயன் பாசனப் பகுதி விவசாயிகள் இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், மாவட்ட காவல்துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
