தமிழகக் காவல்துறை உயரதிகாரிகளின் காணொலி ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மிக முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்ததோடு, போதிய தரவுகள் இல்லாமல் பேசிய ராமநாதபுரம் டிஐஜியையும் கடுமையாக எச்சரித்துள்ள நிகழ்வு காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்து கொண்ட உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட இந்தக் காணொலிக் கூட்டத்தில், போதைப்பொருள் நடமாட்டத்தையும், கடத்தல்காரர்களையும் எவ்வாறு வேரறுக்க வேண்டும் என்பது குறித்துத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
“போலி வழக்குகளால் புதிய குற்றவாளிகளை உருவாக்காதீர்கள்!”
கூட்டத்தில் பேசிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், வழக்கின் எண்ணிக்கையைக் காட்ட வேண்டும் என்பதற்காகவே ‘புட்டப் கேஸ்’ (Put-up Case) போட்டு அப்பாவிகளைப் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்க வைக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்குக் கறாரான உத்தரவைப் பிறப்பித்தார்.
டிஜிபியின் சுடச்சுட எச்சரிக்கை:
“வழக்குகளுக்காக அப்பாவிகளை நீங்கள் டிரக் கேஸில் சிக்க வைத்தால், அவர்கள் பிற்காலத்தில் அதையே தொழிலாக மாற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. டிரக் மாஃபியாக்கள் அவர்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள். எனவே, நிலுவையில் உள்ள உண்மையான போதைப்பொருள் குற்றவாளிகளைப் பிடியுங்கள்; புதிதாகப் போதைப்பொருள் குற்றவாளிகளை உருவாக்கிவிடாதீர்கள்!”
ராமநாதபுரம் டிஐஜிக்கு விழுந்த டோஸ்!
கூட்டத்தின் போது, ராமநாதபுரம் சரக டிஐஜி தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை மற்றும் சட்டம்-ஒழுங்கு வழக்குகள் குறித்துப் போதுமான தகவல்கள் மற்றும் தெளிவான தரவுகள் (Updates) இல்லாமல் பேசியுள்ளார்.
இதனால் கடும் கடுப்பான டிஜிபி, “இவ்வளவு முக்கியமான ஒரு கூட்டத்திற்கு வரும்போது தெளிவான தகவல்களோடு வரமாட்டீர்களா?” என அனைவரது முன்னிலையிலும் அவரைச் செமையாக ‘வறுத்து எடுத்துவிட்டதாக’ தகவல்கள் கசிந்துள்ளன.
போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதில் தீவிர கவனம் செலுத்தும் அதே வேளையில், காவல் துறையின் புள்ளிவிவரக் கணக்குகளுக்காக அப்பாவிகள் பலியாகக் கூடாது என்பதில் டிஜிபி காட்டிய அதிரடி காட்டம், அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
