Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, “மொட்டை அடித்தால் தமிழக அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்” என்ற மர்ம நபரின் பொய்யான தகவலை நம்பி மூன்று பெண்கள் தங்களது தலைமுடியை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதே மோசடியில் சிக்கவிருந்த 20-க்கும் மேற்பட்டோர் கடைசி நேரத்தில் தப்பியுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுகொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டு, தன்னை தாலுகா அலுவலக வட்டாட்சியர் (தாசில்தார்) என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், பழனியம்மாள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து, கொரோனா போன்ற புதிய வகை ஆபத்தான வைரஸ் பரவி வருவதாகவும், அந்த நோய் தலைமுடி வழியாக மனிதர்களுக்கு பரவுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். வெளிநாடுகளில் பலர் மொட்டை அடித்ததன் மூலம் அந்த நோயிலிருந்து தப்பியதாகவும், அதேபோல் மொட்டை அடித்தால் தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  நீதிமன்றம் கொடுத்த சாவி.. உயிரைப் பறித்த சொந்த அண்ணன்! அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் படுகொலையின் பகீர் பின்னணி!

அதன்படி, பெண்களுக்கு ரூ.15 ஆயிரம், ஆண்களுக்கு ரூ.6 ஆயிரம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.45 ஆயிரம் மற்றும் ஒரு மடிக்கணினி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், புதுகொத்தாம்பாடி கிராமத்திற்கு 18 பேருக்கு மட்டுமே டோக்கன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விருப்பமிருந்தால் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார். அதிகாரிகள் பணத்துடன் நேரில் வருவார்கள்; அவர்கள் வருவதற்கு முன்பே மொட்டை அடித்து தயார் நிலையில் இருந்தால் உடனடியாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிராம மக்கள் நம்பிக்கை அடைய வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே சிலர் மொட்டை அடித்து பணம் பெற்றது போல போலியான புகைப்படங்களையும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை உண்மை என நம்பிய கிராமத்தைச் சேர்ந்த காவேரி, ராமாயி மற்றும் சித்ரா ஆகிய மூன்று பெண்கள் உடனடியாக மொட்டை அடித்துக் கொண்டனர். மேலும், அதிகாரிகள் வருவதாகக் கூறப்பட்டதால், கிராமத்தில் நாற்காலி மற்றும் மேசைகளை அமைத்து அவர்களை வரவேற்கும் வகையில் தயாராக காத்திருந்தனர்.

இதையும் படியுங்க  வாடகை கேட்ட ஓனர்..! ஆத்திரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு சோகம்..! அதிர்ச்சி பின்னணி

இதற்கிடையில், மேலும் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மொட்டை அடிக்கத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், மொட்டை அடித்த பிறகு பணம் குறித்து விசாரிக்க மர்ம நபரை தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது செல்போன் திடீரென சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் தாங்கள் மோசடிக்கு ஆளானதை பெண்கள் உணர்ந்தனர். உடனடியாக மற்றவர்களை எச்சரித்ததால், மேலும் பலர் ஏமாறாமல் தப்பினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பெண்களை ஏமாற்றிய மர்ம நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், “அவர் தாசில்தார் என்று கூறியதால் நாங்கள் முழுமையாக நம்பிவிட்டோம். கொரோனா போன்ற புதிய நோய் பரவுகிறது என்றும், மொட்டை அடித்தால் நோய் வராது என்றும் கூறினார். அரசு பணம் தரும் என்று நம்பி நாங்கள் மொட்டை அடித்தோம். பின்னர் அவர் செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க  "மணிமேகலை காப்பியம் உண்மையா? கடலுக்கு அடியில் சோழர்களின் பூம்புகாரைத் தேடும் தமிழக அரசு!"

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் பெயரை பயன்படுத்தி புதிய முறையில் பொதுமக்களை குறிவைத்து மோசடி செய்யும் கும்பலை உடனடியாக கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு அதிகாரிகள் பெயரில் வரும் அழைப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும், இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக காவல்துறையையோ அல்லது சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்தையோ தொடர்புகொண்டு உறுதி செய்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago