தென் கொரியாவின் முன்னணி தொழிலதிபரும், அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் குழுமமான எஸ்கே (SK) குரூப் நிறுவனத்தின் தலைவருமான சே டே-வோன் (Chey Tae-won), தனது முன்னாள் மனைவி ரோ சோ-யோங் (Roh Soh-yeong)-க்கு விவாகரத்து இழப்பீடாக 944 பில்லியன் வான், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,200 கோடி வழங்க வேண்டும் என்று சியோல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தென் கொரிய வரலாற்றிலேயே மிகப்பெரிய விவாகரத்து சொத்து பங்கீட்டுத் தொகையாகக் கருதப்படுகிறது.
சே டே-வோன், தென் கொரியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் குழுமமான எஸ்கே குரூப்பின் தலைவர். அவரது முன்னாள் மனைவி ரோ சோ-யோங், தென் கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ டே-வூவின் மகள் ஆவார். இருவரும் 1988-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடுகள் காரணமாக 2011-ஆம் ஆண்டு முதல் தனித்தனியாக வாழ்ந்து வந்த அவர்கள், 2025-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.
இந்த விவாகரத்துக்கான முக்கிய காரணமாக சே டே-வோனின் திருமணத்திற்கு புறம்பான உறவு கூறப்படுகிறது. 2015-ஆம் ஆண்டு, தனக்கு வேறொரு பெண்ணுடன் உறவு இருப்பதையும், அந்த உறவில் ஒரு குழந்தை இருப்பதையும் அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து 2017-ஆம் ஆண்டு அவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினார்.

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சியோல் உயர் நீதிமன்றம், எஸ்கே குரூப் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், அதன் சொத்து மதிப்பு உயர்வதற்கும் ரோ சோ-யோங் மற்றும் அவரது குடும்பத்தினர் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியுள்ளனர் என்பதை ஏற்றுக்கொண்டது. இதன் அடிப்படையில், அவருக்கு 944 பில்லியன் வான், அதாவது சுமார் ரூ.6,200 கோடி வழங்குமாறு உத்தரவிட்டது.
ரோ சோ-யோங், தனது கணவரின் எஸ்கே குரூப் நிறுவனப் பங்குகளை சொத்து பங்கீடாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், சே டே-வோன் தனது பங்குகளை இழந்தால் நிறுவனத்தின் மீதான கட்டுப்பாடு பாதிக்கப்படும் என்பதால், பங்குகளாக அல்லாமல் முழுத் தொகையையும் ரொக்கமாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், ரூ.6,200 கோடி முழுமையாக செலுத்தப்படும் வரை, அந்தத் தொகைக்கு ஆண்டுக்கு 5 சதவீத வட்டியையும் சே டே-வோன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கில் ரோ சோ-யோங், தனது கணவரின் மொத்த சொத்தில் 50 சதவீதம் பங்கீடாக வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால், திருமண வாழ்க்கையில் இருவரின் பங்களிப்பை மதிப்பீடு செய்த நீதிமன்றம், மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உரியது என்றும், மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு சே டே-வோனுக்கே சொந்தம் என்றும் தீர்மானித்தது.
இந்த வழக்கில் வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகை பல கட்டங்களில் மாற்றமடைந்தது. முதலில் கீழ் நீதிமன்றம் 66.5 பில்லியன் வான் (சுமார் ரூ.430 கோடி) வழங்க உத்தரவிட்டது. பின்னர் உயர் நீதிமன்றம் அதை சுமார் ரூ.8,500 கோடியாக உயர்த்தியது. அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மீண்டும் விசாரிக்கப்பட்டதில், தற்போது ரூ.6,200 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடக்கத் தீர்ப்பை ஒப்பிடும்போது இது சுமார் 14 மடங்கு அதிகமான தொகையாகும்.
இந்த வழக்கில் முன்னாள் அதிபர் ரோ டே-வூ, எஸ்கே குரூப் வளர்ச்சிக்காக வழங்கியதாகக் கூறப்படும் 30 பில்லியன் வான் முக்கிய விவாதமாக இருந்தது. ஆனால், அந்த நிதி சட்டவிரோத லஞ்சப் பணம் என்பதால், சொத்து பங்கீட்டில் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
சமீப ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியால் எஸ்கே குரூப்பின் கீழ் இயங்கும் SK Hynix நிறுவனம் உலகளவில் பெரும் லாபம் ஈட்டியது. இதன் காரணமாக சே டே-வோனின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. அதனால், விவாகரத்து இழப்பீட்டுத் தொகையும் மிகப்பெரிய அளவுக்கு உயர்ந்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதும் எஸ்கே குழும நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்தன. குறிப்பாக, SK Hynix நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 8.3 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. சே டே-வோன் இந்தப் பெரும் இழப்பீட்டை வழங்க தனது பங்குகளை விற்கக்கூடும் என்ற முதலீட்டாளர்களின் அச்சமே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
1953-ஆம் ஆண்டு சிறிய ஜவுளி நிறுவனமாக தொடங்கப்பட்ட எஸ்கே குரூப், இன்று தொலைத்தொடர்பு, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரைச்செலுத்தி உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
இந்நிலையில், சியோல் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து இரு தரப்பினரும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சட்டப்படி வாய்ப்பு உள்ளதால், தென் கொரியாவின் மிகப்பெரிய விவாகரத்து வழக்காகக் கருதப்படும் இந்த சட்டப் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
