சந்தையில் தனது ஆதிக்கத்தைத் தவறாகப் பயன்படுத்தி, போட்டியாளர்களின் சேவைகளைப் புறக்கணித்து, தனது சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஐரோப்பிய ஒன்றியம் (European Union – EU) கூகுள் நிறுவனத்திற்கு மொத்தம் 890 மில்லியன் யூரோ (சுமார் 89 கோடி யூரோ, 1 பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 759 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டு) அபராதம் விதித்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்களின் சந்தை ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட டிஜிட்டல் சந்தைச் சட்டம் (Digital Markets Act – DMA) அமலுக்கு வந்த பிறகு, கூகுள் மீது விதிக்கப்பட்டுள்ள மிக முக்கியமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இந்த அபராதம் ஒரே குற்றச்சாட்டுக்காக விதிக்கப்பட்டதல்ல. கூகுள் தேடல் சேவையிலும் (Google Search), கூகுள் பிளே ஸ்டோரிலும் (Google Play Store) கண்டறியப்பட்ட இரண்டு தனித்தனி விதிமீறல்களுக்காக இந்த மொத்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதில், கூகுள் தேடல் முடிவுகளில் விமானப் பயணம், ஹோட்டல் முன்பதிவு, ஷாப்பிங் உள்ளிட்ட சேவைகளில் தனது சொந்த தளங்களையும் தயாரிப்புகளையும் முன்னிலைப்படுத்தி, போட்டியாளர்களின் சேவைகளை பின்னுக்குத் தள்ளியதாகக் கூறி 460 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை வெளியிடும் டெவலப்பர்கள், பிளே ஸ்டோருக்கு வெளியே கிடைக்கும் குறைந்த விலைச் சலுகைகள் அல்லது மாற்று கட்டண முறைகள் குறித்து பயனர்களுக்குத் தெரிவிப்பதைத் தடுத்ததாகக் கூறப்படும் ‘ஆன்டி-ஸ்டியரிங்’ (Anti-Steering) விதிமுறைகளைப் பின்பற்றியதற்காக மீதமுள்ள அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் (European Commission) அறிவிப்பின்படி, சந்தையில் கூகுள் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி நியாயமான போட்டியை பாதித்துள்ளதாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முறைகேடுகளை 60 நாட்களுக்குள் கூகுள் சரிசெய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் அதன் உலகளாவிய ஆண்டு வருவாயில் 5 சதவீதம் வரை கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு கூகுள் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கூகுளின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் கென்ட் வாக்கர் (Kent Walker) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த விதிமுறைகளுக்கு இணங்க வேண்டுமெனில், ஐரோப்பியப் பயனர்கள் விரும்பும் உடனடி விலை விவரங்கள், ஹோட்டல் மற்றும் விமானங்களின் நேரடி இருப்பு தகவல்கள் உள்ளிட்ட பல முக்கிய தேடல் அம்சங்களை நீக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது ஆரோக்கியமான போட்டியை உருவாக்காது; மாறாக, பயனர்களுக்குக் கிடைக்கும் சேவையின் தரத்தையே பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த அபராத நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே புதிய வர்த்தகப் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை ஐரோப்பிய ஒன்றியம் தேவையின்றி குறிவைப்பதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer) அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் போட்டித்துறைத் தலைவர் தெரசா ரிபெரா (Teresa Ribera), “நாங்கள் அரசியல் அடிப்படையில் செயல்படவில்லை. சட்டத்தின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கிறோம். எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் பணிய மாட்டோம்” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
டிஜிட்டல் சந்தைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் முதல் நிறுவனம் கூகுள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, இதே சட்டத்தை மீறியதாக ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு 500 மில்லியன் யூரோவும், மெட்டா (Meta) நிறுவனத்திற்கு 200 மில்லியன் யூரோவும் ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்திருந்தது.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், அடுத்த 60 நாட்களுக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப தனது தேடல் சேவை மற்றும் பிளே ஸ்டோர் நடைமுறைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் சந்தை ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து கடுமையான அணுகுமுறையைப் பின்பற்றி வரும் நிலையில், கூகுளுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த 890 மில்லியன் யூரோ அபராதம், டிஜிட்டல் சந்தை ஒழுங்குமுறைகளில் முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
