108 இடங்களில் வென்றும், ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் முதிர்ச்சியற்ற வியூகங்களால் த.வெ.க. ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த அரசியல் நெருக்கடியைச் சீர்செய்யவும், கூட்டணி கட்சிகளை அரவணைக்கவும் சி.டி.ஆர்.நிர்மல் குமாரை விஜய் முழுமையாக நம்பிக் களம் இறக்கியுள்ளார்.
த.வெ.க 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருவது வாக்களித்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் செல்வாக்கு இருந்தும், ஆட்சி அமைப்பதற்கான சட்ட விதிமுறைகள், அரசியல் ராஜதந்திரங்களில் அக்கட்சி காட்டி வரும் அனுபவமற்ற போக்கு, “வெற்றி பெற்றும் வீழ்ந்த கதை”யாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் 108 இடங்களைப் பெற்றாலே, ஒரு தனிப்பெரும் கட்சியாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். ஆனால், அந்த நடைமுறையைக்கூட முறையாகச் செய்யாமல் நள்ளிரவில் ஆளுநர் மாளிகைக்குச் சென்றது மிகப்பெரிய கேலிக்கூத்தாகப் பார்க்கப்படுகிறது.
இது குறித்து, த.வெ.க நிர்வாகிகள் சிலர் கூறுகையில் தொடக்கத்தில் இருந்தே பல குளறுபடிகள் நடந்ததை கட்சி தலைமை கவனத்தில் கொள்ளாததால் இன்று வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறி வருகிறது. 108 இடங்களில் வெற்றி பெற்று அதிக தொகுதிகளை பெற்ற கட்சியாக த.வெ.க உள்ளது.
இதை வைத்தே ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். ஆனால், அதை முறையாக செய்யவில்லை. அனுபவம் வாய்ந்தவர்கள் கட்சியில் இருந்தும், அவர்களின் பேச்சை விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி கேட்கவில்லை. வி.சிக – கம்யூ., கட்சிகளிடம், கூட்டணி குறித்து பேச ஆட்களை அனுப்ப்பாமல் வியூக வகுப்பாள ஜான் ஆரோக்கியசாமி ஆலோசனையின் பெயரில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி ஆதரவு கேட்டுள்ளனர். ஜான் ஆரோக்கியசாமியோ அரசியல் அனுபவம் இல்லாத தன் நண்பர்கள் குழுவை வைத்து, கூட்டணி கட்சிகளை அணுகி உள்ளார்.
ஏற்கனவே வேறு திட்டத்தில் இருக்கும் விசிக – கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இது எரிச்சலை தந்துவிட்டது. எனவே தான் விஜயை நேரடியாக பேச சொல்லுங்கள் எனக்கூறி, கூட்டணிக்கு வர விரும்பிய கட்சிகளும் அமைதியாகி விட்டன. ஆதவ் அர்ஜூனா எடுத்தோம் கவிழ்த்தோம் எனப் பேசக்கூடியவர். தேர்தலுக்கு முன்பே அவர் பேசிய பல கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. உதாரணத்துக்கு ”திமுக மிரட்டியதால்தான் ரஜினி அரசியலில் இருந்து பின் வாங்கினார்” என ஆதவ் பேசியது ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தியது. அத்தோடு திருமாவளவன் போன்றோருடன் அவர் பேசுவதற்கு முந்தைய கசப்பான அனுபவங்கள் நெருடலாகவும் இருக்கிறது.

தவெக ஆட்சி அமைப்பது தள்ளி போவதற்கு ஆதவ் மற்றும் ஜான்ஆரோக்கியசாமியின் தவறான வழிகாட்டுதலே காரணமாகிவிட்டது. இதையெல்லாம் உணர்ந்த விஜய் அனைத்தையும் சரி செய்ய இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரை களத்தில் இறக்கியுள்ளார் விஜய். அதன்படி கம்யூனிஸ்டு கட்சிகள், விசிகவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் நிர்மல் குமார். இன்று மாலைக்குள் ஆட்சிக்கு தேவையான பெருபான்மை பெறுவதற்கான வேலைகளை ஜரூராக செய்துவருகிறார் சி.டி.ஆர்.நிர்மல் குமார்.

ஆதவ், ஜான்ஆரோக்கியசாமி போல் உணர்ச்சிவயப்பட்டு பேசாமல், நிலைமைக்கு தகுந்தவாறு பேசும் அரசியல் அனுபவம் கொண்டவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார். தற்போது நிலவும் நெருக்கடி நிலையில், கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைச் செய்தியாளர்களிடம் விளக்க விஜய் தேர்ந்தெடுத்திருப்பது நிர்மல் குமாரைத் தான். அனுபவமற்ற வியூக வகுப்பாளர்கள் மற்றும் சர்ச்சைக்குரிய நபர்களை ஓரங்கட்டிவிட்டு, அரசியல் தெளிவுள்ள நிர்மல் குமாரை விஜய் முன்னிறுத்துவது, த.வெ.க-வுக்குள் ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய மாற்றத்தைக் காட்டுகிறது.” என்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.
-ஆர்.எம்.திரவியராஜ்
