Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்த இளைஞரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில், அந்த பணத்தை திரும்ப வந்து பெற்றுக்கொள்ளுமாறு போலீசார் கெஞ்சிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) ஜான்சன் மற்றும் தலைமை காவலர் (ஏட்டு) நாகராஜ் ஆகிய இருவரையும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர்கள் மீது துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த முகேஷ் என்ற இளைஞருக்கும், ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் சில காலம் கோவையில் ஒன்றாக தங்கி இருந்ததாகவும், பின்னர் அந்த பெண்ணின் கணவர் அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க  "ரீல்ஸுக்கு லைக்ஸ் தேடி... கடைசியில் கம்பி எண்ணிய இன்ஸ்டா பிரபலங்கள்! - சென்னையில் ₹10 லட்சம் சொகுசு பைக்குடன் 'தரமான' செய்கை செய்த போலீஸ்!"

அதன் பிறகும் முகேஷ், அந்த பெண்ணை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அந்த தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

Republic Tamil

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்சன், முகேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையின் போது, இனிமேல் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என எச்சரித்ததுடன், வழக்கை முடித்துவைப்பதற்கும் சாதகமாக நடவடிக்கை எடுப்பதற்கும் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் காவல்துறையில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, கடந்த ஜூலை 16-ஆம் தேதி, பொள்ளாச்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதி, பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களை திருப்பி வழங்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் காவல்துறையினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "சுட்டெரிக்கும் வெயில்... சுருண்டு விழும் மக்கள்! தளபதி விஜய் தீர்த்து வைப்பாரா இந்த தாகத்தை?"

இதன் காரணமாக, தாங்களும் லஞ்ச வழக்கில் சிக்கிக் கொள்வோமோ என்ற அச்சத்தில், உதவி ஆய்வாளர் ஜான்சன், தலைமை காவலர் நாகராஜை தொடர்பு கொண்டு, முகேஷிடம் வாங்கிய ரூ.5,000-ஐ திரும்ப வழங்குமாறு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தலைமை காவலர் நாகராஜ், முகேஷை பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு, “நீங்கள் கொடுத்த ரூ.5,000 பணத்தை உடனே வந்து வாங்கிக்கொள்ளுங்கள். சார் திருப்பிக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். தயவு செய்து வந்து பெற்றுக்கொள்ளுங்கள்” என்று தொடர்ந்து வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதற்கு முகேஷ், “பரவாயில்லை சார்… நான் கொடுத்தது கொடுத்ததுதான். எனக்கு அந்த பணம் வேண்டாம். நான் வரமாட்டேன். எனக்கு இனிமேல் எந்த பிரச்சனையும் வேண்டாம்” என்று கூறி, பணத்தை திரும்பப் பெற மறுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொலைபேசி உரையாடலின் ஆடியோ பின்னர் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக வைரலானது.

இந்த ஆடியோ வெளியாகியதைத் தொடர்ந்து, காவல்துறைக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்ட நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் தலைமை காவலர் நாகராஜ் ஆகிய இருவரும் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். மேலும், அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  சாதனைப் பெண்களுக்குக் கௌரவம்! நவசமாஜ் மகளிர் மேடையின் 3-ஆம் ஆண்டு துவக்க விழா..!

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் தொடர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், காவல் நிலையத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததோடு, பின்னர் அந்த பணத்தை திருப்பிக் கொடுத்து தப்பிக்க முயன்றதாக வெளியாகியுள்ள இந்த ஆடியோ, காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தின் முழு உண்மை நிலை, துறை ரீதியான விசாரணை முடிவடைந்த பிறகே தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago