உலகிலேயே மிக வயதான நிலவாழ் உயிரினமாக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ள ஆமை ‘ஜோனாதன்’ (Jonathan) ஆகும். தற்போது இந்த அரிய வகை ஆமைக்கு 194 வயது ஆகிறது.
சமீபத்தில், கின்னஸ் உலக சாதனை அமைப்பு (Guinness World Records) தனது புகழ்பெற்ற ‘ஐகான் விருதுகள்’ (Icon Awards) பட்டியலில் ஜோனாதனுக்கு முதலிடம் வழங்கி கௌரவித்துள்ளது.
இந்த ஆமை 1832 ஆம் ஆண்டு சிஷெல்ஸ் (Seychelles) தீவில் பிறந்ததாக நம்பப்படுகிறது. தற்போது, தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரிட்டிஷ் யூனியன் பிரதேசமான செயின்ட் ஹெலினா (Saint Helena) தீவில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் (Plantation House) வாழ்ந்து வருகிறது.
1882 ஆம் ஆண்டு, தனது 50 ஆவது வயதில், சிஷெல்ஸ் தீவிலிருந்து செயின்ட் ஹெலினா தீவின் அப்போதைய ஆளுநருக்குப் பரிசாக இது கொண்டு வரப்பட்டது. இது ‘செஷெல்ஸ் ராட்சத ஆமை’ (Seychelles giant tortoise) என்ற அரிய வகையைச் சேர்ந்தது. பொதுவாக இந்த வகை ஆமைகள் சுமார் 150 ஆண்டுகள் வரை வாழும் நிலையில், ஜோனாதன் அதனைத் தாண்டி வாழ்ந்து சாதனை படைத்துள்ளது.
வயது முதிர்வு காரணமாக ஜோனாதனின் கண் பார்வையும் வாசனை உணர்வும் குறைந்துள்ளன. இருப்பினும், நல்ல செவித்திறனுடன், ஆரோக்கியமான பசியுடன் அது நன்றாக வாழ்ந்து வருவதாக அதன் பராமரிப்பாளர்களும் கால்நடை மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். அதற்கு வாழைப்பழம், வெள்ளரிக்காய் உள்ளிட்ட புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள் உணவாக வழங்கப்படுகின்றன.
ஜோனாதனின் செல்கள் மனிதர்களைப் போல முதுமையடையாமல் இருப்பதன் காரணமாக, அதன் நீண்ட ஆயுளின் ரகசியம் குறித்து விஞ்ஞானிகள் தற்போது அதன் டி.என்.ஏ.வை (DNA) ஆய்வு செய்து வருகின்றனர்.
