திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், பன்முகத்தன்மை கொண்ட நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள், திரையுலகினர் இணைந்து சென்னை இல்லம் ஒன்றில் நற்பணி நிகழ்சிகளை மிக விமரிசையாகக் கொண்டாடியுள்ளனர்.
தென்னிந்திய சினிமா விளம்பர வடிவமைப்பாளர் மற்றும் செலிபிரிட்டி மேனேஜ்மெண்ட் துறையில் தடம் பதித்து வரும் என். தனுஷ், ஜி.வி. பிரகாஷ் குமாரின் தீவிர ரசிகர். இவர் தனது அண்ணனாகக் கருதும் ஜி.வி. பிரகாஷின் பிறந்தநாளை அர்த்தமுள்ள வகையில் கொண்டாட முடிவெடுத்தார். அதன்படி, ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் காப்பக இல்லம் ஒன்றில் சிறப்பு நற்பணி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நெகிழ்ச்சியான நற்பணி விழாவில், காப்பகத்தில் உள்ள அனைத்து முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்குப் பிரியாணி உள்ளிட்ட அறுசுவை மதிய உணவு தனுஷ், அவரது நண்பர்கள் சார்பில் பரிமாறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இல்லத்தில் உள்ளவர்களுடன் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு, இனிப்புகள் வழங்கி ஜி.வி. பிரகாஷ் குமாரின் பிறந்தநாள் மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது.

இது குறித்துப் பேசிய சினிமா விளம்பர வடிவமைப்பாளர் தனுஷ், ‘நான் என்றும் அண்ணன் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களின் தீவிர ரசிகன். அவர் தமிழ், இந்தியத் திரையுலகில் தொடர்ந்து பல பிரம்மாண்டமான வெற்றிப் படங்களை வழங்கி, ஏகப்பட்ட தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற வேண்டும். மக்களின் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் பிடிக்கும் பல ஹிட் இசைப் படைப்புகளை அவர் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்று இறைவனிடம் மனமார வாழ்த்துகிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
-சக்திவேல், சிறப்பு நிருபர், புதுச்சேரி
