திருப்பூரில் குடும்பத் தகராறில் மனைவியை கழுத்து நெரித்து கொன்ற கணவர் கைது
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சதாம் (39) மற்றும் அவரது மனைவி அப்செரி காதூன் (25) ஆகியோர், தங்களது ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளுடன் வேலைக்காக திருப்பூருக்கு வந்திருந்தனர். அவர்கள் திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் தங்கி, அங்குள்ள பனியன் நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சதாம் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சதாம் வேலைக்குச் செல்லாதது தொடர்பாக அப்செரி காதூன் தொடர்ந்து அவரை கண்டித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், இன்று காலை குழந்தைகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, பணம் சம்பாதிக்காமல் வீட்டில் இருப்பதாக அப்செரி காதூன் மீண்டும் சதாமை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதாம், மனைவி அப்செரி காதூனின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
கொலை செய்த பின்னரும், சதாம் மனைவியின் உடலருகிலேயே அமர்ந்திருந்துள்ளார். வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, தாய் உயிரிழந்து கிடந்ததை கண்டு கதறி அழுதுள்ளனர்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது, அப்செரி காதூன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர், மனைவியின் உடலருகில் அமர்ந்திருந்த சதாமை கைது செய்தனர்.
மேலும், அப்செரி காதூனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
