Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சமூக ஊடகங்களான வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் கடந்த சில நாட்களாக ஒரு எச்சரிக்கை செய்தி மிக வேகமாகப் பரவி வருகிறது. பொது இடங்கள், பெட்ரோல் பங்குகள் மற்றும் விமான நிலையங்களில் சில நபர்கள் தங்களை சேல்ஸ் ப்ரமோட்டர்ஸ் என்று கூறிக்கொண்டு, மிகவும் அழகான சாவிக்கொத்துகளை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ கொடுக்கிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

வைரல் செய்தியில் இருப்பது என்ன?
அந்தச் செய்தியின்படி, இந்த சாவிக்கொத்துகளில் அதிநவீன ‘கண்காணிப்பு சிப்’ பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் குற்றவாளிகள் நம்மை நம்முடைய வீடு அல்லது கார் நிறுத்துமிடம் வரை பின்தொடர்ந்து வந்து, உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்று எச்சரிக்கிறது. மேலும், இந்தத் தகவல் “இந்திய சர்வதேச விமான நிலைய செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம்” அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது போல, தொலைபேசி எண்களுடன் பகிரப்பட்டு வருகிறது.

உண்மைத் தன்மை என்ன?
இந்தச் செய்தி முற்றிலும் உண்மையல்ல, இது ஒரு வதந்தி. உண்மையில், இந்த ‘சாவிக்கொத்து வதந்தி’ இன்று நேற்று உருவானதல்ல. கடந்த 2018-2019 ஆம் ஆண்டிலிருந்தே உலக அளவில் வெவ்வேறு நாடுகளின் பெயர்களில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்க காவல்துறை எச்சரிப்பது போல இதே வடிவில் இந்த மெசேஜ் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்க  ஜூலை 1 முதல் 'நோ லிமிட்..'! பெட்ரோல் பங்க் கட்டுப்பாட்டை திடீரென மாற்றிய மத்திய அரசு..!

தற்போது இந்திய எண்களை இணைத்து, மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்த மீண்டும் இது பரப்பப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், மிகக் குறைந்த செலவில் சாதாரண சாவிக்கொத்துகளில் நீண்ட தூரம் துல்லியமாகக் கண்காணிக்கும் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி, கார்ப்பரேட் அளவில் குற்றங்கள் செய்வது சாத்தியமற்ற ஒன்று.

பொதுமக்கள் கவனத்திற்கு
எனவே, வாட்ஸ்அப்பில் வரும் இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளை உண்மை என்று நம்பி மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். முன்பின் தெரியாதவர்களிடம் பொருட்கள் வாங்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றாலும், இதுபோன்ற போலி எச்சரிக்கை செய்திகள் மூலம் பரவும் வீண் வதந்திகளை நம்பி அச்சப்படத் தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago