Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

வானில் நாளை ‘ப்ளூ மைக்ரோமூன்’ எனப்படும் மிக அரிய நிலவியல் நிகழ்வு தோன்ற உள்ளது. ஒரே நேரத்தில் ‘ப்ளூ மூன்’ மற்றும் ‘மைக்ரோமூன்’ ஆகிய இரண்டு நிகழ்வுகளும் இணைந்து நிகழ்வது விண்வெளி வரலாற்றில் மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது.

பொதுவாக ஒரு மாதத்தில் ஒரு பௌர்ணமி மட்டுமே ஏற்படும். ஆனால் ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் நிகழ்ந்தால், அதில் இரண்டாவது பௌர்ணமி ‘ப்ளூ மூன்’ என்று அழைக்கப்படுகிறது.

மே 1 ஆம் தேதி முதல் பௌர்ணமி நிகழ்ந்த நிலையில், மே 31 ஆம் தேதி இரண்டாவது பௌர்ணமி நிகழ்வதால் இது ‘ப்ளூ மூன்’ எனப்படுகிறது. எனினும், இந்த நேரத்தில் நிலவு நீல நிறத்தில் தோன்றாது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவு பூமியைச் சுற்றும் பாதை முழுமையான வட்ட வடிவில் இல்லாமல் நீள்வட்ட வடிவில் உள்ளது. இதனால் சில நேரங்களில் நிலவு பூமியிலிருந்து மிகவும் தொலைவில் இருக்கும். அத்தகைய நேரத்தில் ஏற்படும் பௌர்ணமி ‘மைக்ரோமூன்’ என அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்க  அதிர்ச்சியூட்டும் புதிய சட்டம்! இனி அத்தை மகளை கல்யாணம் பண்ண முடியாதா?

இந்த மைக்ரோமூனும், ஒரே மாதத்தில் நிகழும் இரண்டாவது பௌர்ணமியான ப்ளூ மூனும் ஒரே நேரத்தில் நிகழ்வதே ‘ப்ளூ மைக்ரோமூன்’ ஆகும். இந்த நிகழ்வின்போது நிலவு பூமியிலிருந்து அதிக தொலைவில் இருப்பதால், வழக்கமான பௌர்ணமி நிலவை விட அளவில் சற்று சிறியதாகவும், பிரகாசம் குறைவாகவும் காணப்படும்.

விஞ்ஞானிகளின் தகவலின்படி, ப்ளூ மைக்ரோமூனில் நிலவு வழக்கமான முழு நிலவை விட சுமார் 6 முதல் 10 சதவீதம் வரை சிறியதாகவும், சுமார் 10 சதவீதம் வரை குறைந்த பிரகாசத்துடனும் தோன்றும்.

ப்ளூ மூன் பொதுவாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. ஆனால் அது மைக்ரோமூனுடன் இணைந்து தோன்றுவது பல தசாப்தங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் அரிய நிகழ்வாகும். இதற்கு முன்பு இந்த அரிய நிகழ்வு 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி காணப்பட்டது.

இந்த அரிய நிகழ்வை தவறவிட்டால், அடுத்த ‘ப்ளூ மைக்ரோமூன்’ நிகழ்வைக் காண 2053 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை, அதாவது மேலும் 27 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க  வண்ண விளக்குகள்.. வாண வேடிக்கை.. ஆந்திராவை உலுக்கிய ‘தவளை’ கல்யாண வைபோகம்!

இந்தியாவில் மே 30 மற்றும் மே 31 ஆகிய நாட்களில் சந்திரன் உதயமான பிறகு இந்த அரிய நிகழ்வைக் காண முடியும். அப்போது நிலவு பூமியிலிருந்து சுமார் 4,06,134 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானியல் ஆர்வலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு இந்த ப்ளூ மைக்ரோமூன் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இந்த நிகழ்வின்போது எடுக்கப்படும் படங்களை, எதிர்காலத்தில் தோன்றும் பெரிய ‘சூப்பர் மூன்’ காட்சிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago