https://republictn.com/

நடிகர் சஞ்சீவ் கிஷன் நடிப்பில், இயக்குநரும் தமிழக முதல்வர் விஜயின் மகனுமான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த திரைப்படம் வரும் ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இப்படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

படத்தின் வெளியீடு குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிக்மா எனக்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத பயணமாக இருந்தது. எனது கதையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவளித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஜூலை 31ஆம் தேதி சிக்மா திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம்.

விரைவில் படம் குறித்த மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் அப்டேட்கள் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், சிக்மா திரைப்படம் குறித்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் தமிழ்குமரன் கூறுகையில், சிக்மா திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஜூலை 31ஆம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது.

ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறோம். இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய், மிகுந்த தெளிவுடனும் அர்ப்பணிப்புடனும் இந்த படைப்பை உருவாக்கியுள்ளார்” என்று பாராட்டியுள்ளார்.

இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் இந்த திரைப்படத்தை, தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் மற்றும் திரையுலக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago