https://republictn.com/

தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் வாக்குறுதியின் போது, ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள குறு மற்றும் சிறு விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செய்திக்குறிப்பின் படி, 15.02.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர் கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறு விவசாயிகளுக்கு ரூபாய் 50 ஆயிரம் வரையிலான கடன் தொகை முழுமையாக, அதாவது 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு விவசாயிகளுக்கு ரூபாய் 50 ஆயிரம் வரையிலான கடன் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடன் தொகை அதிகரிக்கும் போது, தள்ளுபடி செய்யப்படும் தொகையும் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் பயிர் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14 லட்சத்து 22 ஆயிரத்து 55 விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், இதனால் அரசுக்கு ரூபாய் 2,044 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில், ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள குறு மற்றும் சிறு விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறு விவசாயிகளுக்குக் கூட ரூபாய் 50 ஆயிரம் வரை மட்டுமே முழு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்ட கடன் தொகைக்கு முழு தள்ளுபடி அளிக்கப்படவில்லை.

அதேபோல், சிறு விவசாயிகளுக்கு 50 சதவீதம் மட்டுமே தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், ரூபாய் 50 ஆயிரம் வரம்பு என்பது விவசாயிகளை ஏமாற்றும் நடவடிக்கை என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதில், வேளாண் உற்பத்தி செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ள சூழலில், மத்திய அரசு கட்டுப்படியான ஆதார விலையை அறிவிக்காத காரணத்தால் பெரும்பாலான விவசாயிகள் கடனாளிகளாக மாறியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் விவசாயிகள் கடுமையான கடன் நெருக்கடியில் உள்ள நிலையில், மாநில அரசு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், ஐந்து ஏக்கருக்கு உட்பட்ட விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர் கடனில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 hours ago at 17 hours ago