https://republictn.com/

முதலமைச்சர் விஜயை சந்திக்க வேண்டும் என தலைமைச் செயலக வளாகத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட அமைச்சர்கள் ஒவ்வொருவராக தலைமைச் செயலகத்திற்கு வந்து துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்தனர்.

அந்த நேரத்தில், அமைச்சர்கள் அறைகள் அமைந்துள்ள பகுதிக்குள் தனது குழந்தையுடன் நுழைந்த கிரிஸ்டல் என்ற பெண், “முதலமைச்சர் எங்கே உள்ளார்? அவரைச் சந்திக்க வேண்டும்” எனக் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

என் மீது எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு புகார் கொடுக்க வந்தால், அதற்கே எஃப்ஐஆர் போட்டு விரட்டுகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

போலீசார் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முயன்றபோதும், முதலில் சிஎம் எங்கே இருக்கிறார் என்று சொல்லுங்கள்; பிறகு வருகிறோம் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரிஸ்டல், சென்னை வீட்டிற்குள் நுழைந்த புதுக்கோட்டை போலீசார் தனது கணவரை காரணம் சொல்லாமல் அழைத்துச் சென்றதாகவும், தடுக்க முயன்ற தன்னை தாக்கியதாகவும் தெரிவித்தார்.

என் கணவரை புதுக்கோட்டை போலீசார் இழுத்துச் சென்றார்கள். அவர் என்ன தவறு செய்தார் என்றும், எதற்காக அழைத்துச் சென்றார்கள் என்றும் சொல்லவில்லை. நடு ரோட்டில் இழுத்துச் சென்றார்கள்.

நான் கேட்டபோது என்னை தள்ளிவிட்டார்கள். புதுக்கோட்டை செல்ல எங்களுக்கு ஒரு நாள் ஆகும். அதனால் சிஎம் செலில் புகார் அளிக்க வந்தேன். ஆனால் இங்கும் போலீசார் என்னை இழுத்து தள்ளி அவமரியாதையாக நடந்து கொண்டனர். என் உடையையும் இழுத்து கிழித்தனர். இதற்காகத்தானா போலீசாருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது? என்று ஆவேசமாக கூறினார்.

இதற்கிடையில், கிரிஸ்டலின் புகார் குறித்து தலைமைச் செயலக காவல்துறை புதுக்கோட்டை போலீசாரிடம் விசாரணை நடத்தியதில், அவரது கணவர் முருகேசன் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி சுமார் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரியவந்தது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago