நடுநிசி நேரம்.. அந்தக் கோவில் முன்பாக இரவில் 65 வயது மூதாட்டி ஒருவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, இருட்டுக்குள் ஒளிந்திருந்த 20 வயதான சாத்விக் என்ற வாலிபன் மூதாட்டியை நோக்கி வந்தான். அப்போதைக்கு அவனது நோக்கம் மூதாட்டியின் கையில் இருந்த தங்க மோதிரத்தையும், அவரிடமிருந்த பணத்தையும் திருடுவது மட்டுமே.
நள்ளிரவு நேரத்தில் மூதாட்டியைத் தாக்கிய சாத்விக், அவரிடமிருந்த நகை, பணத்தைப் பறித்தான். அவனது பலத்த தாக்குதலில் மூதாட்டியின் விலா எலும்புகள் நொறுங்கின. வலி தாங்க முடியாமல் மூதாட்டி துடித்தபோது, தன் திருட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில், அவரை அப்படியே கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து தப்ப முயன்றான் சாத்விக்.
சிக்கிய தடயம்
சாத்விக் அவசர அவசரமாக அங்கிருந்து தப்பிச் செல்வதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த வாடகைக்கார் ஓட்டுநர் ஒருவர், சந்தேகமடைந்து அவனை விசாரிக்க முயன்றார். ஆனால் அவன் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலமாகக் கிடந்த மூதாட்டியின் கையிலிருந்த தங்க மோதிரம் காணாமல் போயிருப்பதை முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்தனர்.
இதையடுத்து, இது வெறும் “நகை, பணத்திற்காக நடந்த கொலை” என்று மட்டுமே ஆரம்பத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சாத்விக் கைது செய்யப்பட்டான்.
வெளிவந்த அதிர்ச்சி ட்விஸ்ட்
விசாரணை ஒரு சாதாரணக் கொலை வழக்கைப் போல நகர்ந்து கொண்டிருந்த வேளையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் வந்து சேர்ந்தன. அந்த அறிக்கை காவல்துறையினரையே உலுக்கிப்போட்டது.
நகையைப் பறிப்பதற்காக மூதாட்டியைத் தாக்கிய சாத்விக், அவரது விலா எலும்புகள் உடைந்த நிலையில் அவர் பலவீனமாகக் கிடந்ததைப் பயன்படுத்தி, அவரைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். தன் ஆசையைத் தீர்த்துக்கொண்ட பிறகே, சாட்சியத்தை அழிப்பதற்காக அவரை உயிருடன் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளான் என்பது அம்பலமானது.
ஒரு சாதாரண நகை திருட்டு வழக்காகத் தொடங்கி, பாலியல் வன்கொடுமை, கொடூரக் கொலையாக உருவெடுத்த இந்தத் திருப்புமுனை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
யார் இந்த சாத்விக்?
காவல்துறையின் தீவிர விசாரணையில், கைது செய்யப்பட்ட 20 வயதேயான சாத்விக் ஒரு சாதாரண நபர் அல்ல என்பதும், அவன் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள், பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள ஒரு “தொடர் குற்றவாளி” என்பதும் தெரியவந்தது.
தற்போது சாத்விக் மீது கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவனிடம் காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் வாசலில் உறங்கிய மூதாட்டிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் பெங்களூரு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
