Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Natural spring

”காகம் கூட தண்ணீர் குடிக்க அஞ்சும் இடம்… பீமனின் சாபம் படிந்த பூமி…” – கேட்கவே மயிர்க்கூச்செறிகிறதா? கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஜவ்வாது மலை அடிவாரத்தில், இயற்கை தனக்குள் புதைத்து வைத்திருக்கும் ஒரு ரகசிய பொக்கிஷம்தான் இந்த அங்குத்தி சுனை அருவி.

ஜவ்வாது மலை – நான்கு மாவட்டங்களின் மறைந்திருக்கும் சொர்க்கம்! கிழக்குத் தொடர்ச்சி மலையின் மணிமகுடம்… கொல்லிமலை, சேர்வராயன், கல்வராயனை அடுத்து கம்பீரமாய் நிற்கும் தொடர்… சுமார் 262 சதுர கி.மீ பரப்பு, 250 கி.மீ சுற்றளவு கொண்ட பிரம்மாண்டம்!

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி என நான்கு மாவட்டங்களில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த மலைத்தொடருக்கு ஆங்கிலேயர் காலத்தில் ‘ஜவ்வாது’ என்று பெயர் வந்ததாம். உண்மையான பெயர் ‘நரவி மலை’! இங்கே மலையாளி பழங்குடி மக்களின் பண்பாடும், மூலிகை வாசமும், மர்ம அருவிகளும் ஒன்றாய் கலந்திருக்கின்றன. மழைக்காலத்தில் மட்டும் ஆர்ப்பரிக்கும்  அருவிகளைத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், வெயில் கொளுத்தினாலும், மழை பொய்த்தாலும் வற்றாமல் ஜீவநதியாய் ஓடும் ஒரு அருவி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் “அங்குத்தியின்”முதல் அதிசயம்!

இதையும் படியுங்க  If you want one of the best intercourse toy that will

ஐந்து சுனைகளின் மர்மம்!

பூமியைப் பிளந்துகொண்டு வெள்ளை நீராய் பொங்கும் ஐந்து தனித்த நீர்முகங்கள்… உள்ளூர் மக்கள் இதை பாசத்தோடு ‘சுனை’ என்று அழைக்கிறார்கள். சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், ”இது அடிநில நீரழுத்தத்தால் ஏற்படும் இயற்கை நீரூற்று” என்று அறிவியல் விளக்கம் சொன்னாலும், இந்த மண்ணின் நம்பிக்கை வேறு மாதிரி பேசுகிறது.

பஞ்ச பாண்டவர்களின் பெயர்களான தர்மன், அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் என்றே இந்த ஐந்து சுனைகளுக்கும் பெயர் சூட்டியிருக்கிறார்கள். பாண்டவர்கள் வனவாச காலத்தில் இங்கு தங்கியதாகவும், பீமன் விட்ட சாபத்தால்தான் இந்த அருவியின் மீது காகம் பறக்கவும், தண்ணீர் குடிக்கவும் அஞ்சுவதாகவும் செவிவழிக் கதைகள் உலவுகின்றன. நம்பிக்கையோ, கட்டுக்கதையோ… இந்த மர்ம முடிச்சுகள்தான் அங்குத்திக்கு தனி அடையாளத்தை கொடுத்திருக்கின்றன.

மூலிகை வாசம் கலந்த மருத்துவ நீர்!

ஜவ்வாது மலையில் நிறைந்துள்ள அரிய மூலிகைச் செடிகளின் ஊடே வழிந்து வருவதால், இந்த நீருக்கு நோய்களை தீர்க்கும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால்தான், வெறும் உல்லாசத்திற்காக மட்டுமல்லாமல், உடல் நலம் தேடியும் மக்கள் இங்கு குவிகிறார்கள்.

இதையும் படியுங்க  Look for neat stitching, sturdy materials, strong hardware,

காட்டுக்குள் ஒரு சொர்க்கப் பயணம்!

கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 61 கி.மீ தொலைவில், ஊத்தங்கரையை அடுத்த கெடகானூர் கிராமத்தில் இருந்து 1 கி.மீ தூரம் அடர்ந்த காட்டுப் பாதையில் நடந்தால்தான் இந்த அருவியை அடைய முடியும். வனத்துறையின் பாதுகாப்பில் இருப்பதால், வழக்கமான சுற்றுலாத் தலங்களின் இரைச்சல், கூட்ட நெரிசல் இங்கு இல்லை. இயற்கையோடு மௌனமாக உரையாட விரும்புவோருக்கு இது ஒரு சொர்க்கம்!

நடைபயணத்தின் போது புதிதாக அமைக்கப்பட்ட வழிகாட்டும் பலகைகள், பாதுகாப்பு கண்காணிப்புகள் பயணிகளுக்கு உதவுகின்றன. ட்ரெக்கிங், பறவைகளைப் பார்ப்பது, அருவியில் ஆனந்தக் குளியல் என ஒரு நாள் பிக்னிக்கிற்கு தேவையான அத்தனை அம்சங்களும் இங்கு உண்டு.

ஆயிரம் ஆண்டு திரௌபதி அம்மன் கோவில்!

அருவிக்குச் செல்லும் வழியிலேயே 1000 ஆண்டுகள் பழமையான திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதனால், இது வெறும் சுற்றுலாத் தலம் மட்டுமல்ல, ஆன்மிகச் சுற்றுலாத் தலமாகவும் மாறி வருகிறது. ஒரே பயணத்தில் இயற்கையையும், இறையருளையும் தரிசிக்கலாம்.

இதையும் படியுங்க  ஜவ்வாது மலையில் ஆர்ப்பரிக்கும் பீமன் நீர்வீழ்ச்சி... வீக்கெண்டில் குவியும் கூட்டம்!

கட்டணம் வெறும் ரூ.30 தான்!

இத்தனை அழகையும், அதிசயத்தையும் காண நுழைவுக் கட்டணமாக வெறும் ரூ.30 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. குடும்பத்தோடும், நண்பர்களோடும் குறைந்த செலவில் நிறைவான அனுபவத்தைப் பெற இதைவிட சிறந்த இடம் வேறில்லை. எதிர்காலத்தில் இங்கு மேலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

எப்படி செல்வது?

கிருஷ்ணகிரி – மதூர் – சாமல்பட்டி – ஊத்தங்கரை கோவிந்தாபுரம் வழியாக 61 கி.மீ திருப்பத்தூரில் இருந்து சிங்காரப்பேட்டை செல்லும் சாலையில், கோவிந்தாபுரம் வழியாக 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவிந்தாபுரம், to கெடகானூர் சென்று, காட்டு வழியில் சிறு நடைபயணம் மேற்கொண்டால் “அங்குத்தி சுனையை” அடைந்துவிடலாம்.

ஒருமுறை சென்று வாருங்கள்… வற்றாத நீரும், விடுபடாத நினைவுகளும் உங்களுக்காக காத்திருக்கின்றன!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago