தமிழர்களின் தாய்மடியான கீழடி, அருள்மிகு ஐய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக கடந்த 14.02.2026 அன்று கீழடி ஐய்யனார் கோவிலில் கிராமப் பொது மக்கள் சார்பில் மாபெரும் கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, கோவில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தத் தயாராக உள்ளது.

இதற்கிடையில், கடந்த 14.10.2026 அன்று மீண்டும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டபோது, சட்டம் -ஒழுங்கு பிரச்சினை எழும் சூழல் காரணமாக இந்து சமய அறநிலையத்துறையின் கும்பாபிஷேக தேதி உத்தரவு தாமதமானது. இடர்ப்பாடுகளைக் கடந்து, கீழடி கிராம ஊராட்சி முக்கியஸ்தர்கள் சார்பாக இன்று 18.10.2026 ஞாயிற்றுக்கிழமை மிக முக்கியமான மற்றும் உறுதியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அருள்மிகு ஐய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்த, ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் தலா 4 நபர்கள் திருப்பணிக் குழுவாக நியமிக்கப்படுவார்கள். இவர்களே கும்பாபிஷேகம் தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பவர்களாகத் திகழ்வார்கள். அந்தந்த சமுதாய மக்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கும் அந்த 4 நபர்களின் முடிவே இறுதியானது.
இனி எந்தவொரு தனிநபருக்கும் தன்னிச்சையாகத் தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்பட மாட்டாது. திருப்பணிக் குழுவில் உள்ளவர்களே சம்பந்தப்பட்ட சமுதாய மக்களுக்கு உரிய தகவல்களைத் தெரிவிப்பார்கள். நல்ல நாள் பார்க்கப்பட்டு குறிக்கப்பட்டதின்படி, வரவிருக்கும் தை மாதம் 29-ம் தேதி (12.02.2027), வெள்ளிக்கிழமை, சஷ்டி திதியும், அஸ்வினி நட்சத்திரமும், அமிர்தயோகியும் கூடிய சுபயோக சுதினத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. அன்று காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை கும்பாபிஷேகம் நடத்த உத்தமம், சுபம், சுபம் என்று காலம் கணித்து எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தக்கடிதம், விவரங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் இதற்குரிய அனுமதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளனர். கிராம மக்களின் ஒற்றுமையையும், உறுதியையும் பறைசாற்றும் வகையில், எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடித் தீர்மானங்கள் கீழடி வட்டார மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
