https://republictn.com/

பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு, கேரளாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசின் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்பதை தற்போது தவிர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் எட்டவில்லை. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உடனடியாக அவர்களுக்கு ஆதரவளித்து கூட்டணியில் இணைந்தது. இதனால் தென் மாநிலங்களில் மிகப்பெரிய அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் சார்பில் சதீஷன் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தனது கேரளா பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி இந்த பதவியேற்பு விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தது. குறிப்பாக, கேரளாவில் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள விஜய் பங்கேற்றால் விழா மேலும் சிறப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், புதிய அரசின் பொறுப்புகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு விஜய் இந்த பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது கடந்த கால கேரள பயணங்களில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசல் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தேசியத் தலைவர்கள் மற்றும் அண்டை மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் விஜயின் வருகை கட்டுப்படுத்த முடியாத கூட்ட நெரிசலை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உள்துறை தரப்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாகவே விஜய் தனது கேரள பயணத்தை ரத்து செய்துள்ளார். இதனால் அவரை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து சதீஷன் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் விரைவில் வேறு ஒரு நாளில் திருவனந்தபுரம் வருகை தருவார் என தெரிவித்துள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago