மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் தவெகவுக்கு மரண பயத்தைக் காட்டியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக பெற்றுள்ள வெற்றி அதிகார பலத்திற்கும் பணநாயகத்திற்கும் கிடைத்த தற்காலிக வெற்றி என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தலில் தவெக தனது பண பலத்தையும் அதிகார பலத்தையும் முழுமையாகப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, மக்கள் ரீல்ஸ் ஆட்சியிலும் ரீல்ஸ்களிலும் மயங்கி ஆளுங்கட்சிக்கு வாக்களித்துள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதுடன், அதிமுக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மீது ஆளுங்கட்சி பொய் வழக்குகளைப் புனைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
குறுக்கு வழியில் தவெக வெற்றி பெற்றுள்ளதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி தங்கள் பக்கம் இழுத்து, பிள்ளை பிடிக்கும் கும்பலைப் போல தவெக ஆட்சியில் இருப்பதாகச் சாடியுள்ளார்.
இதனால் தவெகவை ‘தற்காலிக வெற்றிக் கழகம்’ என்றும் அவர் விமர்சித்துள்ளார். அதேநேரத்தில், “அதிமுக ஓர் ஆலமரம்; ஆயிரம் காலத்துப் பயிர். அதிமுகவை அழித்துவிட வேண்டும் என யாரும் கனவு காண வேண்டாம்” என்று குறிப்பிட்ட அவர், அனைத்து சோதனைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு அதிமுக மீண்டு வரும் எனத் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, தவெக வேட்பாளர் ஒருவர் மேடையில் அழுததையும், அவரை முதல்வர் விஜய் தேற்றியதையும் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அது சினிமாவைவிடப் பெரிய நாடகம் என விமர்சித்திருந்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விஜய்யின் ஐந்து நிமிடப் பேச்சும் ரீல்ஸ் அரசியலும் அம்பலமாகிவிட்டதாக மீண்டும் சாடியுள்ளார். மேலும், இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தெருத்தெருவாகச் சென்று விசில் ஊதும் நிலைக்கு முதல்வர் விஜய் தள்ளப்பட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், அதிமுக வேட்பாளர் பானுமதி 45,280 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மதுராந்தகம் தொகுதியிலும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார்.
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட தொகுதிகளில் திமுகவைவிடக் குறைவான வாக்குகளைப் பெற்று அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், தாராபுரம் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுக வேட்பாளர் பானுமதி 2,639 வாக்குகளும், தவெக வேட்பாளர் சத்தியபாமா 2,634 வாக்குகளும் பெற்று, வெறும் ஐந்து வாக்குகள் வித்தியாசத்தில் பானுமதி முன்னிலையில் இருந்தார். இந்த ஆரம்பகட்ட முன்னிலை அதிமுக முகாமில் தற்காலிக உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தேர்தல் பிரசாரத்தின்போது, தான் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடிகர் விஜய் தனது திரைப்பட வெளியீடு தொடர்பான பிரச்சினைக்காகத் தனது வீட்டின் வாசலில் மூன்று மணி நேரம் காத்திருந்து உதவி பெற்றதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். தனக்கு நெருக்கடி ஏற்பட்டபோது அதிமுக துணை நின்றதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய்க்கு அடிப்படை நன்றியுணர்வுகூட இல்லை என விமர்சித்தார். மேலும், மேடைகளில் அதிமுகவின் பெயரைக் குறிப்பிடாமல் ‘மற்றும் பலர்’ என விஜய் மழுப்புவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவின் வாக்கு வங்கி கணிசமாகக் குறைந்து, இரு தொகுதிகளிலும் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு கட்சிக்குள்ளும் வெளியிலும் நெருக்கடிகளை அதிகரிக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதிமுகவின் 54 ஆண்டுகால வரலாற்றில் இது மிக மோசமான பின்னடைவுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்படும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தின்போது, எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராகக் கட்சிக்குள் எதிர்ப்புக் குரல்கள் வலுப்பெறலாம் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ள நிலையில், தனது வாக்கு வங்கியை மீட்டெடுப்பதுடன், கட்சிக்குள் எழக்கூடிய சவால்களையும் அதிமுக எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்படுகிறது.
