ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஆக்கிமேடு பகுதியில், பணம் கேட்டுத் தொல்லை செய்த பெண் ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொன்று, உடலை 10 துண்டுகளாக வீசிய வழக்கில் காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆக்கிமேடு பகுதியைச் சேர்ந்த கல்யாணி ஹோட்டல் ஊழியராக பணியாற்றி வந்தார். அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்த கவுஸ் முகைதீன் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த ஆண் குழந்தையை கவுஸ் முகைதீன் தனது உறவினரான பவானிப்புரத்தைச் சேர்ந்த ஷபி என்பவரிடம் கொடுத்துள்ளார். ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள ஷபி, ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் அக்குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டார். குழந்தையைப் பார்ப்பதற்காக கல்யாணி அடிக்கடி ஷபியின் வீட்டிற்குச் சென்று வந்த நிலையில், அவருக்கும் ஷபிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இதற்கிடையே, கல்யாணி ஷபியிடம் தொடர்ந்து பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். பணம் தராவிட்டால் குழந்தையைத் தூக்கிச் சென்றுவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற ஷபி, தனது கடையில் வேலை செய்யும் ஊழியருடன் சேர்ந்து கல்யாணியை அரிவாளால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்தார். அதன்பிறகு சடலத்தை 10 துண்டுகளாக வெட்டி அருகில் உள்ள கால்வாயில் வீசிவிட்டுத் தப்பியோடினர்.
கால்வாயில் உடல் பாகங்கள் மிதப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல் பாகங்களைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியைச் சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் ஆரம்பத்தில் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. பின்னர், சடலத்தில் இருந்த ஆடைகள் மற்றும் கையில் இருந்த பச்சைக்குத்துதல் அடையாளம் மூலம் கொலை செய்யப்பட்டது கல்யாணி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பணம் கேட்டுத் தொல்லை செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஷபி தனது ஊழியருடன் சேர்ந்து இந்தக் கொலையை அரங்கேற்றியது அம்பலமானது. இதையடுத்து, கொலையில் தொடர்புடைய ஷபி மற்றும் அவரது கடை ஊழியரைக் கைது செய்தனர்.
