தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான சி. ஜோசப் விஜய் மதுரைக்கு வருகை தந்துள்ள நிலையில், நடிகை திரிஷாவின் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் மற்றும் சமூக வலைதள வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முதல்வர் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைக்க உள்ள நிலையில், மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் ‘திரிஷா நற்பணி மன்றம்’ என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்களில், முதல்வர் விஜய்யை தங்களின் ‘தாய்மாமன்’ எனக் குறிப்பிட்டு, தங்க மோதிரம் வழங்கும் விழாவை வரவேற்கும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், முதல்வர் விஜய் ஒரு குழந்தையை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படத்துடன், அவருக்கு அருகில் நடிகை திரிஷாவின் புகைப்படமும் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே மதுரையில் ‘திரிஷா நற்பணி மன்றம்’ என்ற பெயரில், நடிகை திரிஷாவை அரசியலுக்கு அழைக்கும் வகையிலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த மன்றத்தின் பதிவு எண்ணாக 53/2026 குறிப்பிடப்பட்டுள்ளது.
திரிஷாவை அரசியலுக்கு வருமாறு அழைக்கும் வகையில் தொடர்ந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தற்போது முதல்வர் விஜய்யின் மதுரை வருகையையொட்டி அவரது புகைப்படத்துடன் திரிஷாவின் புகைப்படமும் இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடுகள் மற்றும் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் திரிஷாவின் பெயர் அடிபட்டு வரும் சூழலில், இந்த போஸ்டர் விவகாரம் மேலும் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே மதுரையில் திரிஷா ரசிகர்கள் அவருக்காக ‘நற்பணி மன்றம்’ தொடங்கி, அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். தற்போது மதுரையின் முக்கிய சந்திப்புகள் மற்றும் தெருக்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த போஸ்டர்கள் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளாலோ அல்லது அதிகாரப்பூர்வ அரசு துறைகளாலோ ஒட்டப்படவில்லை என்றும், முதல்வர் விஜய்யை வரவேற்கும் வகையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘திரிஷா நற்பணி மன்றத்தினரே’ இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு மருத்துவமனையில் நடைபெறும் அரசு திட்ட விழாவை முன்னிட்டு, ஒரு நடிகையின் ரசிகர் மன்றம் இத்தகைய போஸ்டர்களை ஒட்டியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்த போஸ்டரில், “தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்மாமன் இல்லை என்று வருத்தப்படும் தாய்மார்களுக்குத் தன்னையே தாய்மாமன் என்று கூறி மகிழ்ச்சியடையும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்குத் தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி!” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் விஜய் ஒரு குழந்தையை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படமும், அவருக்கு அருகில் நடிகை திரிஷாவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்பாக மதுரையில் திரிஷா ரசிகர்கள் ஒட்டியிருந்த போஸ்டர்களிலும், அவரை ‘அன்பு அக்கா திரிஷா’ எனக் குறிப்பிட்டதுடன், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் அவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியார் ஆகியோரின் தோற்றங்களிலும் திரிஷாவை சித்தரித்திருந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் அருள் பெற்று திரிஷா அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து போஸ்டர்கள் மூலம் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து திரிஷாவும் தீவிர அரசியலில் களமிறங்கப் போகிறார் என்ற வதந்திகள் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திரிஷா போட்டியிட வாய்ப்புள்ளதாக வெளியாகிய சில அரசியல் பேச்சுகள், தற்போது மதுரை போஸ்டர் விவகாரத்தால் மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளன. எனினும், திரிஷா தரப்பிலிருந்தோ அல்லது தமிழக வெற்றிக் கழகத் தலைமையிடமிருந்தோ இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷாவின் பெயர்கள் அடிக்கடி இணைத்து பேசப்படுவதால், தவெக கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியிலும் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இருவரையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பரவும் தனிப்பட்ட வதந்திகள் எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் ரீதியாக பயன்படுத்தக்கூடிய ஒரு விவகாரமாக மாறிவிடக் கூடாது என்ற கவலை சில தொண்டர்கள் மத்தியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், கட்சியின் நற்பெயரை கருத்தில் கொண்டு முதல்வர் விஜய்யும் நடிகை திரிஷாவும் தொழில்முறை இடைவெளியைப் பேண வேண்டும் என்ற கோரிக்கைகளும் சில தவெக ஆதரவாளர்களிடம் இருந்து எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவாதங்களுக்கு சினிமா தொடர்பான நிகழ்வுகள் மட்டுமே காரணம் அல்ல என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. விஜய் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுக்கொண்ட விழாவின்போது நடிகை திரிஷா அவரது இல்லத்தில் முக்கிய நபராகக் காட்சியளித்ததாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டதாகவும், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போதும் அதற்குப் பின்னரும் திரிஷாவின் ஈடுபாடு குறித்து வெளியான தகவல்களும் தற்போது மீண்டும் விவாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் இணைந்து மதுரை போஸ்டர் விவகாரத்தை அரசியல் ரீதியாகவும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக்கியுள்ளன.
மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் ‘திரிஷா நற்பணி மன்றம்’ என்றும், அதன் பதிவு எண்ணாக Reg. No: 53/2026 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த மன்றத்தின் தலைவர் அல்லது செயலாளர் யார் என்பது போன்ற விவரங்கள் போஸ்டரில் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக, வெள்ளைச் சட்டை அணிந்த சில நபர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு திரிஷாவின் அரசியல் போஸ்டர்கள் தொடர்பாக அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், முதல்வர் விஜய்யை விமர்சித்து சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, மதுரையில் திரிஷா நற்பணி மன்றத்தினர் ஆர்.பி. உதயகுமாரைக் கண்டித்து பதிலடி போஸ்டர்களை ஒட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ரசிகர் மன்ற போஸ்டர்கள் அரசியல் களத்திலும் எதிரொலித்ததாகப் பார்க்கப்பட்டது.
பொதுவாக ஒரு நடிகரோ அல்லது நடிகையோ அரசியலுக்கு வர வேண்டுமென்றால், நேரடியாக அரசியல் கருத்துகளைத் தெரிவித்து, பொதுமக்கள் மத்தியில் தங்களது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது வழக்கம். ஆனால், நடிகை திரிஷா இதுவரை அரசியலுக்கு வருவது குறித்து வெளிப்படையாக எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் தொடங்கி, அரசியல் பாணியிலான போஸ்டர்களை வெளியிட்டு வருவது சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.
குறிப்பாக, திரிஷாவை ராணி வேலு நாச்சியார் தோற்றத்தில் சித்தரித்தது முதல், அவரை அரசியலுக்கு அழைக்கும் போஸ்டர்கள், முதல்வர் விஜய்யுடன் இணைத்து வெளியிடப்பட்டுள்ள தற்போதைய வரவேற்பு போஸ்டர்கள் வரை அனைத்தும் இணையத்தில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனை வைத்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

“இப்போதெல்லாம் தமிழ்நாட்டு அரசியலுக்கு வர நடிகர்களுக்கு ஆடிஷன் கூட தேவையில்லை; ரசிகர்களே நேரடியாக போஸ்டர் அடித்து அழைத்துவிடுகிறார்கள்” என சிலர் சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை திரிஷாவை அரசியலுக்கு அழைக்கும் வகையிலான போஸ்டர்கள் தொடர்வதும், தற்போது முதல்வர் விஜய்யின் மதுரை வருகையை ஒட்டி அவரது புகைப்படத்துடன் திரிஷாவின் புகைப்படமும் இடம்பெற்றிருப்பதும், இந்த விவகாரத்தை மீண்டும் அரசியல் மற்றும் சமூக வலைதள விவாதத்தின் மையத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த போஸ்டர்கள் தொடர்பாக நடிகை திரிஷா தரப்பிலோ அல்லது தமிழக வெற்றிக் கழகத் தலைமையிடமிருந்தோ அதிகாரப்பூர்வ விளக்கம் அல்லது ஒப்புதல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
