வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெறவிருந்த மூன்று நாள் வங்கி வேலைநிறுத்தம் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ஐக்கிய வங்கிகள் கூட்டமைப்பு இடையே நள்ளிரவில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் மாறிய நிலைமை
செப்டம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணிக்கு இந்திய வங்கிகள் சங்கத்தின் குழுவிற்கும், ஐக்கிய வங்கிகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அரையாண்டு நிறைவு பெறவுள்ள சூழலில், வேலைநிறுத்தம் நடைபெற்றால் வணிகப் பரிவர்த்தனைகளும் பொதுமக்களின் அன்றாட பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவியது.
இந்தக் கூட்டத்தில், வங்கி தொழிற்சங்கங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் மீது நேர்மறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய வங்கிகள் சங்கம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, வேலைநிறுத்தத்தைக் கைவிடுவதாக ஐக்கிய வங்கிகள் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சனிக்கிழமை விடுமுறை முடிவு
தற்போது வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை வழங்கப்படுகிறது. அனைத்து சனிக்கிழமைகளையும் பொது விடுமுறையாக அறிவித்து, வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக இருக்க வேண்டும் என்பது வங்கி ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையாகும். (இது மார்ச் 2024 ஊதிய ஒப்பந்தத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்).
ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஐக்கிய வங்கிகள் கூட்டமைப்பு இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ஐக்கிய வங்கிகள் கூட்டமைப்புஉறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழு, அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்.
வாடிக்கையாளர்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையிலும், ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்துத் தீர்வு காணப்படும்.
செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை
சனிக்கிழமை விடுமுறை மட்டுமன்றி, பிற முக்கியக் கோரிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. நான்காம் நிலை (Scale-IV) மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டம் தொடர்பான கவலைகளுக்குத் தீர்வு காணப்படும். மத்திய அரசுக்கு புதிய முன்மொழிவுகளை அனுப்பும் முன், PLI திட்டம் சார்ந்த சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும். மார்ச் 8, 2024 அன்று விவாதிக்கப்பட்ட பிற நிலுவைக் கோரிக்கைகளையும் விரைவில் தீர்க்க இரு தரப்பும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி
வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டதால், செப்டம்பர் 28, திங்கட்கிழமை முதல் அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும். முன்னதாக, வேலைநிறுத்தத்தைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமையன்றும் சில வங்கிக் கிளைகள் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் அவசரப் பணிகளை முடித்துக்கொடுத்தன. தற்போது வேலைநிறுத்த அச்சுறுத்தல் முற்றிலும் விலகியுள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிச் சேவைகளைத் தடங்கலின்றிப் பெற முடியும்.
