இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, மொபைல் ரீசார்ஜ் திட்டங்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள், டேட்டா தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
சமூக வலைதளங்களிலும் சில செய்திகளிலும் “ரீசார்ஜ் கட்டணம் பாதியாகக் குறைகிறது” என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், உண்மையில் இந்த அறிவிப்பின் பின்னணி என்ன, வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்போகும் மாற்றங்கள் என்ன என்பதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது.
புதிய விதிகளின்படி, டேட்டா தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்காக வெறும் வாய்ஸ் கால் மற்றும் SMS மட்டும் கொண்ட தனித்தனி ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும். குறிப்பாக, பட்டன் போன் பயன்படுத்துபவர்கள், முதியவர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் டேட்டா பயன்படுத்தாத குறைந்த வருமானம் கொண்டவர்கள், தேவையில்லாத டேட்டாவுக்காக பணம் செலுத்த வேண்டிய நிலையைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, 30 நாட்கள் மற்றும் அதற்கும் குறைவான கால அவகாசம் கொண்ட Voice, SMS மற்றும் Data சேவைகள் அடங்கிய திட்டங்களுக்கு இணையாக, டேட்டா இல்லாத Voice + SMS-only திட்டங்களையும் வழங்க வேண்டும் என்று TRAI புதிய விதிகளில் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் குறுகிய காலத்திற்கு மட்டும் அழைப்புகள் மற்றும் SMS தேவைப்படும் வாடிக்கையாளர்களும் தங்களுக்கு தேவையான சேவைகளுக்கு மட்டும் பணம் செலுத்த முடியும்.
இதுவரை பல நிறுவனங்கள் Voice + SMS-only திட்டங்களை 80 அல்லது 84 நாட்கள், 336 அல்லது 365 நாட்கள் போன்ற நீண்ட கால அவகாசங்களில் மட்டுமே அதிகமாக வழங்கியதாக TRAI தெரிவித்துள்ளது. இதனால் குறைந்த வருமானம் கொண்டவர்கள் ஒரே முறையில் அதிக தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வருவதற்காகவே குறுகிய கால Voice + SMS-only திட்டங்களையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாதமும் ஒரே குறிப்பிட்ட தேதியில் புதுப்பிக்கக்கூடிய Voice + SMS திட்டத்தையும் வழங்க வேண்டும். உதாரணமாக, ஒருவர் ஒரு மாதத்தின் 5-ம் தேதி ரீசார்ஜ் செய்தால், அடுத்தடுத்த மாதங்களிலும் 5-ம் தேதியைச் சுற்றியே திட்டத்தை புதுப்பிக்க முடியும். அந்தத் தேதி இல்லாத மாதங்களில், அந்த மாதத்தின் கடைசி நாளே புதுப்பிப்பு தேதியாகக் கருதப்படும். இதனால் ஒவ்வொரு முறையும் ரீசார்ஜ் காலாவதியாகும் தேதியை கணக்கிட வேண்டிய சிரமம் குறையும்.
நீண்ட கால ரீசார்ஜ் செய்ய விரும்புபவர்களுக்காகவும் Longer Validity Voice + SMS-only திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் குறுகிய காலம் மட்டுமின்றி, நீண்ட கால பயன்பாட்டிற்கும் டேட்டா இல்லாத திட்டத்தைத் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே 365 நாட்கள் வரை நீண்ட கால திட்டங்கள் தொடர்பான விதிகள் இருந்த நிலையில், தற்போது குறுகிய காலத் திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், Voice + SMS + Data அடங்கிய Bundled திட்டத்தில் இருந்து டேட்டாவை நீக்கி Voice + SMS-only திட்டம் வழங்கும்போது, அதற்கேற்ற வகையில் கட்டணமும் கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று TRAI கூறியுள்ளது. பெயரளவில் சிறிய தொகையை மட்டும் குறைத்து, டேட்டா இல்லாத திட்டம் எனக் கூறுவதைத் தவிர்ப்பதே இதன் நோக்கம். ஆனால், அனைத்து ரீசார்ஜ் கட்டணங்களும் 50 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என்று TRAI நேரடியாக உத்தரவிடவில்லை. எனவே, “ரீசார்ஜ் கட்டணம் பாதியாகக் குறையும்” என்பது பொதுவான கட்டாய விதி அல்ல.
இந்த விவகாரம் திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. நாடாளுமன்றத்தில் எம்.பி. ராகவ் சதா உள்ளிட்டோர், 28 நாட்கள் கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் தேவையில்லாத டேட்டா கட்டணங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும், 2024-ஆம் ஆண்டிலேயே TRAI டேட்டா இல்லாத Voice + SMS திட்டங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டது. ஆனால், அவை பெரும்பாலும் நீண்ட கால திட்டங்களாக மட்டுமே வழங்கப்பட்டதால், சாமானிய மக்களுக்கு குறுகிய காலத் தேர்வுகள் கிடைக்கவில்லை.
இந்த குறைபாட்டை சரிசெய்யும் வகையில் தற்போது புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இறுதி விதிகளை வெளியிடுவதற்கு முன்பு பொதுமக்கள், நுகர்வோர் அமைப்புகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் இருந்து மொத்தம் 1,132 கருத்துகள் பெறப்பட்டதுடன், Open House Discussion-மும் நடத்தப்பட்டது. அவற்றை பரிசீலித்த பிறகே இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டதாக TRAI தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம் குறிப்பாக டேட்டா பயன்படுத்தாத பட்டன் போன் பயனாளர்கள், முதியவர்கள், ஏழை மற்றும் எளிய மக்கள், வீட்டில் பிராட்பேண்ட் அல்லது Wi-Fi வசதி வைத்திருக்கும் நகர்ப்புற நுகர்வோர் ஆகியோருக்கு பயனுள்ளதாக இருக்கும். மாதந்தோறும் அழைப்புகள் மற்றும் SMS-க்கு மட்டும் பணம் செலுத்த விரும்புபவர்கள் இனி தேவையில்லாத டேட்டாவை உள்ளடக்கிய திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் குறையும்.
மேலும், ஒரு சிம் கார்டை டேட்டாவிற்கும், மற்றொரு சிம் கார்டை வங்கி OTP, அழைப்புகள் மற்றும் SMS பெறுவதற்கும் பயன்படுத்தும் Dual-SIM பயனாளர்களுக்கும் இந்த மாற்றம் பணத்தைச் சேமிக்க உதவும். இரண்டாவது சிம்மிற்கு தேவையில்லாத டேட்டா திட்டத்தை வாங்குவதற்குப் பதிலாக Voice + SMS-only திட்டத்தைத் தேர்வு செய்ய முடியும்.
TRAI-யின் புதிய விதிமுறைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வர உள்ளன. இதன்படி Jio, Airtel, Vi, BSNL உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் திட்டங்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதனால், குறிப்பாக டேட்டா தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் தங்களுக்குத் தேவையான சேவைகளை மட்டும் தேர்வு செய்யும் வாய்ப்பு அதிகரிக்க உள்ளது.
எனவே, இந்த அறிவிப்பின் உண்மையான முக்கியத்துவம் “அனைத்து ரீசார்ஜ் கட்டணங்களும் பாதியாகக் குறைகின்றன” என்பதில் இல்லை. மாறாக, டேட்டா தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால Voice + SMS-only திட்டங்கள் கிடைப்பதும், அவற்றில் தேவையற்ற டேட்டா கட்டணம் திணிக்கப்படாமல் இருப்பதுமே TRAI-யின் புதிய விதிகளின் முக்கிய நோக்கமாகும்.
