காபூலுக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கிய புதிய தொகுப்பை அனுப்பி, ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் ஒருமுறை உதவியுள்ளது.
எப்போதும் போலவே, ஆப்கானிஸ்தானுக்கு அத்தியாவசியமான உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவப் பொருட்களை அனுப்பி, ஒரு பொறுப்பான அண்டை நாடாக தனது கடமையை இந்தியா மீண்டும் ஒருமுறை நிறைவேற்றியுள்ளது. இந்த பொருட்கள் காபூலுக்கு வந்து சேர்ந்ததை வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியாவின் மனிதாபிமான உதவி தொடர்கிறது என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளப்பதிவில் ”இந்தியாவில் இருந்து மற்றொரு தொகுப்பு காபூலை வந்தடைந்துள்ளது. இதில், அந்நகரின் அரசு மருத்துவமனைக்கான உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவப் பொருட்கள் உள்ளன. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா வழங்கும் மனிதாபிமான உதவிகளில் சுகாதார சேவைகள் எப்போதும் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகின்றன. ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதில் இந்தியா எப்போதும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், தனது மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அடங்கிய குறிப்பிடத்தக்க தொகுப்புகளை இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 20 அன்று, காபூலில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒப்படைக்கப்பட்டது. செப்டம்பர் மாத தொடக்கத்தில், மலேரியா, டெங்கு மற்றும் பிற பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக, 16 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான மருந்துகள், நோய் கண்டறியும் கருவிகளை இந்தியா பொது சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பியது. இந்த மனிதாபிமான உதவியின் நோக்கம், சுகாதார சேவைகளை வலுப்படுத்துவது, நோய்களைத் தடுப்பது மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பொதுமக்களுக்கு உதவுவது என்று இந்தியா தொடர்ந்து கூறிவருகிறது.
இருதரப்பு உறவுகள் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. ஆனால் கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானுடனான நமது ஈடுபாடு வலுப்பெற்றுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் பல்வேறு பத்திரிகையாளர் சந்திப்புகளில் தெரிவித்துள்ளது. இதில் தூதரக பேச்சுவார்த்தைகள், மனிதாபிமான உதவி, மேம்பாட்டு ஒத்துழைப்புத் திட்டங்கள் அடங்கும். இந்த முன்னுரிமைகளின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானுடனான நமது உறவுகளும் ஒத்துழைப்பும் தொடர்ந்து வளரும்.
ஜூன் மாதத்தில், ஆப்கானிஸ்தான் மக்களின் உடல்நலம், நல்வாழ்வுக்கான இந்தியாவின் நீண்டகால அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியா ஐந்து டன் அத்தியாவசிய மருந்துகளையும் காபூலுக்கு அனுப்பியது. இதற்கு முன்னதாக, மே 22 அன்று, ஆப்கானிஸ்தான் குழந்தைகளுக்கான தடுப்பூசித் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா 20 டன் பேசில்லஸ் கால்மெட்-குயரின் மற்றும் டெட்டனஸ், டிப்தீரியா தடுப்பூசிகளை காபூலுக்கு அனுப்பியது.
