மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாகக் கூறி, திமுக சார்பில் வீடியோ ஆதாரங்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில், அரசியல் ஆதாயத்திற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைத் திரட்டி பிரச்சார நிகழ்வுகளில் பயன்படுத்தியதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறுகையில், முந்தைய தேர்தல்களில் வேட்பாளர்கள் அல்லது கட்சி நிர்வாகிகளின் சொந்தக் குழந்தைகள் அவர்களுடன் பிரச்சாரத்திற்கு வருவது வேறு;
ஆனால், பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களைத் திரட்டி நிறுவன ரீதியாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது வேறு என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தேர்தல் விதிமுறைகளும் நீதிமன்ற உத்தரவுகளும் இடமளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் திமுக தரப்பில் அளித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவே, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதே வீடியோவை வெளியிட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்துவது குறித்து முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியிருந்தார். அதனைத் தொடர்ந்து விவகாரம் மேலும் பரபரப்பானது.
திமுக தரப்பில் அளிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், மதுராந்தகம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அவசர உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீடியோவில் இடம்பெற்றுள்ள பள்ளி மாணவர்கள் எந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் தவெக நிர்வாகிகளால் அழைத்து வரப்பட்டார்களா அல்லது தாமாகவே வந்தார்களா என்பது குறித்து உடனடியாக கள ஆய்வு நடத்தி, 24 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டாரப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ரகசிய சுற்றறிக்கை அனுப்பியதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், தேர்தல் முடியும் வரை பள்ளி மாணவர்கள் சீருடையுடனோ அல்லது பள்ளி நேரங்களிலோ எந்தவொரு அரசியல் கட்சியின் பேரணி மற்றும் பிரச்சாரங்களில் பங்கேற்கக் கூடாது என்றும், விதிமீறல் ஏற்பட்டால் பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் மீறி தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் மீது உண்மைக்கு புறம்பான அல்லது நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தேர்தல் ஆதாயத்திற்காக எந்தவொரு கட்சியையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அறிவுறுத்தியுள்ளதாக திமுக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து திமுக சார்பில் புகார் அளித்துள்ளதாகவும், தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மதுராந்தகம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஆதாரத்துடனும் ஏற்கனவே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், அரசு வாகனங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஆதாரத்தையும் தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளதாகவும், அரசு வாகனங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகம் என்பதால் சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது.
மாணவர்களைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்திலும் திமுக வீடியோ ஆதாரங்களை அதிகாரிகளிடம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மாணவர்களின் கைகளில் கட்சிக் கொடிகளை வழங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறி நடவடிக்கை கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறுகையில், மாணவர்களை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்பது சட்ட விதிகளைத் தாண்டி சமூகப் பொறுப்பும் அறிவார்ந்த அணுகுமுறையும் சார்ந்த விஷயம் என்றும், தேர்தல் ஆணையம், நீதிமன்றம் மற்றும் சட்ட விதிமுறைகளைப் பொருட்படுத்தாமல் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தேர்தல் ஆணையம் நியாயமான மற்றும் நேர்மையான தேர்தலை நடத்துவதை உறுதி செய்ய இதுபோன்ற அத்துமீறல்களுக்கு உடனடி நடவடிக்கை அவசியம் என்றும் அவர் கூறினார்.
மேலும், தேர்தல் முடியும் வரை இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, முந்தைய பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களிலும் குழந்தைகள் கட்சி சார்ந்த பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவர்களின் கைகளில் கட்சிக் கொடிகள் வழங்கப்பட்டதாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ஒரு கட்சி நிர்வாகி அல்லது வேட்பாளர் தனது சொந்தக் குழந்தையை பிரச்சாரத்திற்கு அழைத்துச் செல்வது வேறு என்றும், பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களைத் திரட்டி அழைத்து வந்து அரசியல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவது வேறு என்றும் விளக்கினார்.
திராவிட முன்னேற்றக் கழகம் இதுபோன்று பள்ளி மாணவர்களைத் திரட்டி பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதில்லை என்றும், கட்சி நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுடன் செல்வதைத் தடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்து குழுவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது என்பதையே தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளதாகவும், அந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
