Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

‘D56’

நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான ‘D56’-ன் அதிகாரப்பூர்வ பூஜை மற்றும் படப்பிடிப்பு, சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்திக்கு அருகே உள்ள புகழ்பெற்ற மாரநாடு கருப்பணசாமி கோயிலில் இன்று பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் மற்றும் நடிகர் வடிவேலு இருவரும் இணைந்து முழுநீளத் திரைப்படத்தில் பணியாற்றுவது இதுவே முதல்முறையாகும்.

இந்தத் திரைப்படத்தில் தனுஷ், வடிவேலுவுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன் மற்றும் ‘உறியடி’ புகழ் விஜயகுமார் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சமூக வலைத்தளங்களில் இப்படத்திற்கு ‘படையல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்து இயக்குநர் நகைச்சுவையாக பதிலளித்துள்ள நிலையில், தயாரிப்புத் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தலைப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

மாரநாடு கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற தொடக்க விழாவில், நடிகர் தனுஷ் 18 அடி உயரமுள்ள பிரம்மாண்ட அரிவாளை கருப்பணசாமி தெய்வத்திற்கு காணிக்கையாகச் செலுத்தி சாமி தரிசனம் செய்தார். தனுஷ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் திரண்டதால், மாரநாடு கிராமத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அந்தப் பகுதியே மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது.

இதையும் படியுங்க  அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? தந்தை கஸ்தூரி ராஜா கொடுத்த அதிரடி அப்டேட்!
Dhanush

பூஜை நடைபெறும் இடத்தில் திரண்டிருந்த ரசிகர்களை கட்டுப்படுத்தும் முயற்சியின்போது, சில கேமரா மற்றும் படப்பிடிப்பு உபகரணங்கள் தொடர்பாக வாக்குவாதம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனுஷ் தனது ரசிகர்களிடம், “எல்லாரும் பத்திரமாக வீட்டிற்குச் செல்லுங்கள்” என்று அன்புடன் வேண்டுகோள் விடுத்தார்.

மேடையில் பேசிய நடிகர் வடிவேலு, தனுஷுடன் இத்தனை ஆண்டுகளாக இணைந்து நடிக்காததற்கான காரணத்தை தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் விளக்கினார். “இத்தனை வருடங்களாக நானும் தனுஷ் தம்பியும் ஏன் சேர்ந்து நடிக்கவில்லை என்று நீங்கள் கேட்கலாம்.

சினிமா துறையில் இரண்டு பேர் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அத்தனை வேலைகளையும் பார்ப்பார்கள். சும்மா தீப்பொறியை வைத்து கொளுத்திப் போடாமல், எங்களுக்கு இடையே பெரிய தீப்பந்தத்தையே தூக்கிப் போட்டுவிட்டார்கள்” என்று கூறினார். வடிவேலுவின் இந்தப் பேச்சைக் கேட்டு அருகில் இருந்த தனுஷ் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.

தொடர்ந்து தனுஷைப் பார்த்து, “ஏன் தம்பி… அது என்னவோ தெரியல, நீங்க மட்டும் பேசாதீங்க… உங்களைப் பார்த்தால் மட்டும் எனக்கு ஒரு மாதிரி கடுப்பாகுது” என தனது பழைய காமெடி பாணியில் வடிவேலு கலாய்த்தார். இதைக் கேட்ட தனுஷ் மேடையிலேயே விழுந்து விழுந்து சிரித்தார். அதேபோல், படத்தின் பூஜை நிகழ்ச்சியே மாநாடு நடைபெறுவது போல் பிரம்மாண்டமாக இருப்பதாகவும், இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தைப் பார்த்து வியப்பதாகவும் வடிவேலு தெரிவித்தார்.

இதையும் படியுங்க  "அம்மா பெண்ணியம் பேசல, வாழ்ந்து காட்டினாங்க!" - ரியோ ராஜ் கருத்துக்கு நெட்டிசன்கள் வச்ச 'அல்ட்ரா கிரிஞ்ச்' செக்!
Dhanush

முன்னதாக, பல ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ மற்றும் ‘படிக்காதவன்’ உள்ளிட்ட படங்களில் வடிவேலு நடிப்பதாக இருந்த நிலையில், சில காரணங்களால் அந்த வாய்ப்புகள் நிறைவேறவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தனுஷ் – வடிவேலு கூட்டணி அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படம் அரசியல் சார்ந்ததாக இருக்காது என்றும், முற்றிலும் ஆச்சரியத்தையும் பெருமையையும் தரக்கூடிய வித்தியாசமான கதையாக இருக்கும் என்றும் நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

மாரநாடு கருப்பணசாமி கோயிலில் படப்பூஜை சிறப்பாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்காக 16 கிடாக்கள் வெட்டப்பட்டு பிரம்மாண்டமான அசைவ கிடா விருந்து வழங்கப்பட்டது. கிராமத்துத் திருவிழா போன்ற இந்த ஏற்பாடு படக்குழுவினரையும் நெகிழச் செய்தது.

இதனிடையே, தனுஷ் நடிப்பில் ஏற்கனவே நிறைவடைந்துள்ள ‘ஓம்’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மலையாள மெகாஸ்டார் மம்மூட்டியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க  "நடிகர் தனுஷுக்குள் இப்படியொரு கார்ப்பரேட் கில்லாடியா? பலரும் அறியாத அவரது சைலண்ட் பிசினஸ் சாம்ராஜ்யம்!"
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago