திரைப்பட இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தை விஜய்யின் நகைச்சுவை உணர்வு குறித்தும், தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் (SAC) தனக்கு வழங்கிய அறிவுரை குறித்தும் சுவாரசியமான பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய்யின் படங்களில் சமீபகாலமாக மாஸ் ஆக்ஷன் மற்றும் அரசியல் சார்ந்த கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவருடைய இயல்பான நகைச்சுவை நடிப்பு திரையில் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்துப் பேசிய ஜேசன் சஞ்சய், “அப்பாவின் நகைச்சுவை உணர்வு (Sense of Humour) எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் அப்பாவுடன் படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்தால், அவரிடம் இருக்கும் அந்தக் குழந்தைத்தனமான குறும்பு மற்றும் நகைச்சுவைத் திறனை (Childlike Nature) முழுமையாக வெளிக்கொண்டு வரும் கதையை இயக்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஜேசன் சஞ்சய் தான் இயக்குநராகப் போகும் முடிவை தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகரிடம் தெரிவித்தபோது, அவர் கதை குறித்து அதிகம் விவாதிக்கவில்லை. மாறாக, ஒரு இயக்குநராக படப்பிடிப்புத் தளத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
“ஒரு காட்சியை எடுக்கும்போது, இயக்குநராக உனக்கு ஏதேனும் தயக்கமோ அல்லது சந்தேகமோ இருந்தால், அதை ஒருபோதும் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் மற்றவர்களுக்கோ அல்லது உன்னுடைய படக்குழுவினருக்கோ காட்டிவிடக் கூடாது. ஒரு தலைவனாக எப்போதுமே தெளிவான முடிவோடு இருக்க வேண்டும்” என்பதுதான் தனது தாத்தா வழங்கிய அந்தப் பொன்னான அறிவுரை என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
அதேபோல், படப்பிடிப்புத் தளத்தில் தனது தந்தை விஜய் கடைப்பிடிக்கும் நேர மேலாண்மை (Punctuality) மற்றும் அர்ப்பணிப்பு தனக்கு மிகப்பெரிய பாடம் என்றும் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.
தனது தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரே நாளின் முதல் பாதியில் ஒரு படத்தையும், இரண்டாம் பாதியில் மற்றொரு படத்தையும் இயக்கிய கடுமையான உழைப்பாளி என்றும், அவர்களது உழைப்பே தனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருப்பதாகவும் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்தப் பேட்டியில் ஜேசன் சஞ்சயிடம், “புகழ்பெற்ற ஹாலிவுட் ஆக்ஷன் நடிகர் ஜேசன் ஸ்டாதம் (Jason Statham) உடன் இணைந்து நடிக்கும் ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதில் எந்த இந்திய நடிகரைத் தேர்வு செய்வீர்கள்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சஞ்சய் யோசிக்காமல் உடனடியாக சிரித்துக்கொண்டே, “என் அப்பாதான் (விஜய்). அவர்தான் என்னுடைய முதல் சாய்ஸ்” என்று பெருமையுடன் பதிலளித்தார்.

நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக (CM Vijay) பொறுப்பேற்றது குறித்தும் ஜேசன் சஞ்சய் முதன்முறையாகப் பேசியுள்ளார். “அப்பா சிஎம் ஆகியிருப்பதை ஒரு வரலாற்றுப் புரட்சியாகப் பார்க்கிறேன். இதனால் எனக்கோ, என் தங்கைக்கோ அல்லது என் குடும்பத்திற்கோ ஒரு கூடுதல் பொறுப்பும், பாரம்பரியமும் வந்து சேர்ந்துள்ளது. அதை நாங்கள் காப்பாற்ற வேண்டும். இனி வெளியில் நடமாடும்போது மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்” என்று தனது முதிர்ச்சியான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
வெளியில் தனது தந்தை மற்றும் அவரது அரசியல் குறித்து பேசப்படும் பொதுவிவாதங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்ற கேள்விக்கும் சஞ்சய் பதிலளித்துள்ளார். “நான் இப்போது சில கட்டுப்பாடுகளோடு (Limitations) இருக்க வேண்டியுள்ளது. சினிமா தளத்தைத் தாண்டி அப்பாவின் அரசியல் அல்லது தனிப்பட்ட விஷயங்களுக்குள் நான் செல்வதில்லை” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சினிமாவில் வாரிசு என்ற அடையாளம் இருந்தாலும், தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதிக்கவே விரும்புவதாகவும் ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டுள்ளார்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2, 2026 அன்று வெளியாகிறது. புதையல் வேட்டை மற்றும் கடத்தல் (Treasure Hunt & Heist) பின்னணியைக் கொண்ட த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், துரோகத்தால் எல்லாவற்றையும் இழக்கும் ஒரு ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். 500 கோடி ரூபாய் மதிப்பிலான மாஃபியா கும்பலை எதிர்த்து தனது நண்பர்களுடன் இணைந்து அவர் நடத்தும் பிரம்மாண்ட திருட்டுத் திட்டமே படத்தின் மையக்கதையாகும்.

இந்நிலையில், ஜேசன் சஞ்சய் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தனது பெயருக்கு முன்னால் இருந்த ‘V’ என்ற எழுத்தை, அதாவது விஜய்யைக் குறிக்கும் எழுத்தை நீக்கிவிட்டு, ‘ஜேசன் சஞ்சய் S’ (Jason Sanjay S) என மாற்றியுள்ளார்.
இந்த மாற்றம் தனது தாயார் சங்கீதா சொர்ணலிங்கம் (Sangeetha Sornalingam) அவர்களைக் கௌரவிக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. சினிமாவில் தனது தந்தையின் பிம்பத்தை மட்டுமே நம்பியிருக்காமல், தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“அப்பாவின் படங்களில் ‘போக்கிரி 2’ அல்லது ‘சச்சின் 2’ ஆகியவற்றில் எதை இயக்க ஆசைப்படுகிறீர்கள்?” என்ற கேள்விக்கும் சஞ்சய் ஆச்சரியமான பதிலை அளித்துள்ளார்.
அதற்கு அவர், தனக்கு ‘பத்ரி 2’ (Badri 2) படத்தை இயக்கவே அதிக விருப்பம் என்றும், அந்தப் படத்திற்கு ஒரு தனித்துவமான ‘சிக்மா’ (Sigma) ஸ்டைல் மாஸ் உணர்வு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது சிறுவயதில் விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் அடிச்சா தாங்கமாட்ட” பாடலுக்கு அப்பாவுடன் சேர்ந்து நடனமாடிய அனுபவம் குறித்தும் ஜேசன் சஞ்சய் பேசியுள்ளார்.
வெறும் 3 வயதாக இருந்தபோதே தனது அப்பா விஜய் நடித்த ‘திருமலை’ திரைப்படத்தை திரையரங்கில் பார்த்ததுதான் தனக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்படக் காரணம் என்றும், அப்பாவுடன் இணைந்து நடனமாடிய அந்த அனுபவம் தற்போதும் மறக்க முடியாத ஒன்று என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
நடிகரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய்யின் ரசிகர்கள் தனக்கு அளித்து வரும் ஆதரவு குறித்தும் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். “அப்பாவின் ரசிகர்கள்தான் என்னுடைய மிகப்பெரிய பலமும் சப்போர்ட்டும்” என்று கூறியுள்ள அவர், “அப்பா சேர்த்து வைத்துள்ள நற்பெயரைக் காப்பாற்ற வேண்டிய பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது” என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
