ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர். வீரமணி மீதான போக்சோ வழக்கில், அகில இந்திய ரயில்வே தொழிலாளர் கூட்டமைப்பான AIRF-ன் தலைவரும், எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளருமான கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு எதிராக போலீசார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரகாஷின் பெரம்பூர் இல்லத்திற்குச் சென்று போலீசார் சம்மன் வழங்கிய நிலையில், அவர் ஏற்கனவே வெளிநாடு சென்றுவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சென்னை திரும்புவதாக இருந்த அவர், கடைசி நேரத்தில் பயணத் திட்டத்தை மாற்றி வெளிநாட்டிலேயே தலைமறைவாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரகாஷ் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்றால் அவரைத் தடுத்து விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரகாஷின் பெரம்பூர் இல்லம், ராயப்பேட்டை அலுவலகம், ஜெம் வீரமணியின் கோபாலபுரம் அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மொபைல் போன்கள், லேப்டாப்கள், டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவை சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
வீரமணியின் முன்னாள் உதவியாளரான கணேசன் அண்மையில் கைது செய்யப்பட்டார். சுமார் 23 ஆண்டுகள் வீரமணியிடம் பணியாற்றிய கணேசன், வீரமணியின் ரகசிய நடவடிக்கைகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
வீரமணி தொடர்பான ஆபாச வீடியோ பதிவுகள் கணேசனின் செல்போனில் இருந்ததாகவும், அவற்றை நீண்டகாலமாக போலீசாரிடம் ஒப்படைக்காமல் மறைத்து வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. கணேசனின் வாக்குமூலம் மற்றும் செல்போன் தரவுகளின் அடிப்படையிலேயே பிரகாஷின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரமணி மீதான போக்சோ வழக்கை மூடி மறைக்க அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் கைமாறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீரமணி தனது கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தையும், ஊட்டியில் உள்ள சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அவசரமாக விற்றதாகவும், அந்த சுமார் 130 கோடி ரூபாய் பணத்தை பல்வேறு நபர்களுக்கு செட்டில்மெண்ட் செய்வதில் பிரகாஷ் இடைத்தரகராகச் செயல்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள நிலத்தை விற்பனை செய்ததில் பிரகாஷுக்கு முக்கியப் பங்கு இருந்ததாகவும், அதன் மூலம் கிடைத்த சுமார் 70 கோடி ரூபாய் பல்வேறு நபர்களுக்கு செட்டில்மெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சென்னையில் பணியாற்றும் இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வீரமணியிடமிருந்து வழக்கை அமுக்குவதற்காக பல கோடி ரூபாய் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணப் பரிமாற்றம் மற்றும் வழக்கை மூடி மறைக்க முயன்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக கூடுதல் காவல் ஆணையர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2026-ல் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்கை முடிப்பதற்கான Closure Report தாக்கல் செய்ய போலீசார் முயன்றதாகவும், அதனை சிறப்பு போக்சோ நீதிமன்றம் நிராகரித்து மறுவிசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், வீரமணியின் கூட்டாளியான மகேந்திர சிம்ஹனின் வீட்டிலிருந்து அசல் வீடியோ ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் மீட்கப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக வீரமணி கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கணேசனின் செல்போனில் இருந்ததாகக் கூறப்படும் வீடியோ பதிவுகள் மூலமாக பிரகாஷ் மற்றும் சில போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. கணேசன் மூலம் பல வீடியோக்கள் பிரகாஷிடம் சென்றதாகவும், அவற்றை வைத்துக்கொண்டு பிரகாஷ் வீரமணியை மிரட்டினாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தன்னிடம் இருந்ததாகக் கூறப்படும் ஆபாச வீடியோ ஆதாரங்களை போலீசாரிடம் தெரிவிக்காமல் மறைத்ததற்காக பிரகாஷ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதும் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் மேலும் பல முக்கிய நபர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்பதால், சிறப்பு புலனாய்வுக் குழுவான SIT அமைத்து முழு நெட்வொர்க்கையும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. வழக்கை மூடி மறைக்க முயன்றதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ, பாமக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று அறிக்கைகள் மூலம் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பிரகாஷின் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப்கள், டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பிரகாஷ் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், வீரமணியின் சொத்து விற்பனை, பணப் பரிமாற்றங்கள், வீடியோ ஆதாரங்கள் மற்றும் வழக்கை மூடி மறைக்க முயன்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் மேலும் பல முக்கிய நபர்களின் தொடர்புகள் வெளிச்சத்துக்கு வரலாம் என போலீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
