தமிழக வெற்றிக் கழகத்தின் தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் ச. கீர்த்தனாவின் மருத்துவ சிகிச்சை மற்றும் அவர் மீண்டும் பணிக்குத் திரும்பிய விவகாரம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, “காலையில் ஆபரேஷன்… மாலையில் மீட்டிங்கா?” என்ற கேள்வியுடன் பல்வேறு பதிவுகள் மற்றும் மீம்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் லண்டன் முதலீட்டுப் பயணத்தில் அமைச்சர் கீர்த்தனா பங்கேற்காதது தொடர்பாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவின. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கீர்த்தனாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் லண்டன் செல்ல முடியவில்லை என்றும், சில நாட்கள் ஓய்வு தேவைப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தனது எக்ஸ் தளப் பதிவில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு காமாட்சி மருத்துவமனையில் காலர் எலும்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். மருத்துவர்கள் சுமார் 20 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியிருந்த போதிலும், மாநிலப் பணிகள் மீதான அர்ப்பணிப்பு காரணமாக நான்கு நாட்களிலேயே அவர் மீண்டும் பணிக்குத் திரும்பியதாக கனிமொழி சந்தோஷ் குறிப்பிட்டிருந்தார். இந்தத் தகவல் தொடர்பான செய்திகளும் வெளியாகின.
இதன் பின்னர், பெரிய அளவிலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு இவ்வளவு குறுகிய காலத்தில் ஒருவர் எவ்வாறு இயல்பாகப் பணிகளில் ஈடுபட முடியும் என சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்பினர். கழுத்து அல்லது தோள்பட்டை பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், மருத்துவக் கட்டுப்பாடுகள் இன்றி கூட்டங்கள் மற்றும் அலுவல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகத் தோன்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்தும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்த விவாதம் தீவிரமடைந்த நிலையில், அமைச்சர் கீர்த்தனா தரப்பில் இருந்து மருத்துவ ஆவணங்கள் மற்றும் டிஸ்சார்ஜ் சம்மரி பொதுவெளியில் பகிரப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதில், அவருக்கு புதிதாக பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என்றும், ஏற்கனவே ஏற்பட்ட பழைய காலர் எலும்பு முறிவுக்காக பொருத்தப்பட்டிருந்த உலோகத் தண்டை அகற்றுவதற்கான “Implant Exit” என்ற சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நடைமுறை வழக்கமான எலும்பியல் சிகிச்சையின் ஒரு பகுதியாகும் என்றும், எலும்பு முறிவு குணமடைந்த பிறகு முன்பு பொருத்தப்பட்டிருந்த உலோகத் தகடு அல்லது தண்டை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்படுவதாகவும் மருத்துவ ஆவணங்களை மேற்கோள் காட்டிய செய்திகள் தெரிவித்துள்ளன. இதன் அடிப்படையில், அமைச்சர் விரைவாகப் பணிக்குத் திரும்பியதில் மருத்துவ ரீதியாக முரண்பாடு இல்லை என தவெக தரப்பினர் விளக்கம் அளித்து வருகின்றனர்.
அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சமூக வலைதளப் பயனர்கள், அமைச்சர் கீர்த்தனாவின் சிகிச்சை குறித்து தவெக தரப்பில் வெளியான விளக்கங்களை விமர்சித்து வருகின்றனர். எக்ஸ் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், “நான்கு நாட்களில் பணிக்குத் திரும்பியது” தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே, கீர்த்தனாவின் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்த கனிமொழி சந்தோஷ், அறுவை சிகிச்சைக்குப் பிறகு வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொண்ட நிலையிலும், கையில் கட்டுடன் அவர் பணிக்குத் திரும்பி நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்ததாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தவெக தரப்பினர், முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்துக்கான தொழில் முதலீட்டு ஏற்பாடுகளை அமைச்சர் கீர்த்தனா மருத்துவமனையில் இருந்தபோதும் ஒருங்கிணைத்ததாகக் கூறி வருகின்றனர். மேலும், கனிமொழி சந்தோஷ் குறிப்பிட்ட “நான்கு நாட்கள்” என்ற தகவலை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு விமர்சிப்பதாகவும் தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தைச் சுற்றி ட்விட்டர் எனப்படும் எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் பல்வேறு மீம்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, “காலையில் ஆபரேஷன்… மாலையில் பிரஸ் மீட்” போன்ற சினிமா பாணியிலான வசனங்களையும், வடிவேலு நடித்த நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் பில்லா, அந்நியன் போன்ற திரைப்படங்களின் காட்சிகளையும் அமைச்சர் கீர்த்தனாவின் புகைப்படங்களுடன் இணைத்து சிலர் மீம்களை உருவாக்கி வருகின்றனர்.
தமிழக அரசியலில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நேரங்களில் அரசியல் தலைவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது தொடர்பாக அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்படுவது வழக்கம் எனவும், அதுபோன்ற பின்னணியிலேயே இந்த விவகாரமும் சமூக வலைதளங்களில் விவாதமாகி வருவதாகவும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனிடையே, அமைச்சர் கீர்த்தனாவின் உடல்நிலை குறித்து ஆரம்பத்தில் வெளியான விளக்கத்துக்கும் பின்னர் வெளியான மருத்துவ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிகிச்சை விவரங்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக, முதலில் “காலர் எலும்பு அறுவை சிகிச்சை” எனக் கூறப்பட்ட நிலையில், பின்னர் வெளியான மருத்துவ ஆவணங்களில் “Implant Exit” என்ற நடைமுறை மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையே, முதலமைச்சர் விஜயுடன் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லாதது தொடர்பான சர்ச்சையும் தொடர்கிறது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உடல்நலக்குறைவு காரணமாக கீர்த்தனா லண்டன் செல்லவில்லை எனக் கூறியிருந்த நிலையில், கனிமொழி சந்தோஷ் அறுவை சிகிச்சை காரணமாக அவர் செல்ல முடியவில்லை என விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் கீர்த்தனா செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னையில் உள்ள காமாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அன்றே சிகிச்சை மேற்கொண்டதாகக் கூறப்படும் மருத்துவ ஆவணங்களும், அதே நாளில் அவர் தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றதாகக் கூறப்படும் எக்ஸ் தளப் பதிவும் சமூக வலைதளங்களில் ஒப்பிட்டு பகிரப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, செப்டம்பர் 10-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் Hyundai நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் கீர்த்தனா கலந்துகொண்டதாகக் கூறப்படும் வீடியோவை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அதே நாளில் அவர் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், இரு இடங்களிலும் அவர் எவ்வாறு இருந்தார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, அதே நாளில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்க முடியுமா என்றும் சமூக வலைதளப் பயனர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு நகைச்சுவையான பதிவுகளும் மீம்களும் பகிரப்பட்டு வருகின்றன.
மருத்துவ ஆவணங்களின்படி, அமைச்சர் கீர்த்தனா செப்டம்பர் 10-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் செப்டம்பர் 12-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், அமைச்சர் கீர்த்தனாவின் லண்டன் பயணத்தைத் தவறவிட்டதற்கான காரணம், அவர் மேற்கொண்ட சிகிச்சையின் தன்மை மற்றும் செப்டம்பர் 10-ஆம் தேதி அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் தூத்துக்குடி நிகழ்ச்சி தொடர்பான பதிவு ஆகியவை தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து தவெக தரப்பிலும், எதிர்க்கட்சிகளின் சமூக வலைதளப் பிரிவுகளிலும் மாறுபட்ட விளக்கங்கள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
