நேபாளம் திபெத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் இதுவரை 676 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 3,000 பேரைக் காணவில்லை. இதற்கிடையில், வெள்ளம் தொடர்பான செய்திகளையும், வீடியோக்களையும் சீனா தணிக்கை செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள மக்கள் வெள்ளம் குறித்த தகவல்களை முதன்மையாக அரசு ஊடகங்களிலிருந்தே பெறுகிறார்கள். அரசு ஊடகங்களின் வெளியாகும் தகவல்கள் நிவாரணம், மீட்புப் பணிகளில் அதிக கவனம் செலுத்துகின்றன. அதே நேரத்தில் வெள்ளப் பேரழிவின் முழுமையான நிலவரஙகளை வெளிப்படுத்தப்படவில்லை.
உள்ளூர்வாசிகள் வெள்ளம், நிலச்சரிவுகள் குறித்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். இதில் திபெத்தின் கியிராங் கவுண்டியில் உள்ள ஒரு எல்லைக் கடக்கும் இடத்தில் ஏற்பட்ட இடிபாடுகளின் வெள்ளம் குறித்த வீடியோவும் அடங்கும். இந்த வீடியோ சீன சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீன அரசு ஊடகங்கள் அந்த வீடியோவைக் காண்பிப்பதற்குப் பதிலாக அதன் புகைப்படத்தை மட்டுமே பயன்படுத்தியுள்ளன.

மீட்புப் பணிகளுக்கு முன்னுரிமை
சீனாவின் அரசு ஊடக செய்திகள் முக்கியமாக நிவாரணம், மீட்புப் பணிகளில் கவனம் செலுத்தின. பாதிக்கப்பட்ட பகுதிக்கு சீன ராணுவ வீரர்கள், பிற நிவாரணப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகளுக்காக ட்ரோன்கள், ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான பீப்பிள்ஸ் டெய்லி, கியிராங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க ஜனாதிபதி ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக வியாழக்கிழமை செய்தி வெளியிட்டது.
வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் திபெத்திற்குச் செல்வதற்கும், உள்ளூர் மக்களுடன் தொலைபேசியில் பேசுவதற்கும் கூட கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். இது, நேபாளத்திற்கு வெளியே பேரழிவு குறித்து ஒரு சுதந்திரமான விசாரணையை நடத்துவதை கடினமாக்கியுள்ளது. திபெத் 1950களில் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அது சீனாவின் மிகவும் உணர்திறன் வாய்ந்த, இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றாகத் தொடர்கிறது.

லண்டனில் உள்ள SOAS பல்கலைக்கழகத்தின் சீனா நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டீவ் சாங், தி கார்டியன் பத்திரிகையிடம், முன் அனுமதி இல்லாமல் திபெத் தொடர்பான செய்திகளை வெளியிடுவது சாத்தியமற்றது என்று கூறினார். அவரைப் பொறுத்தவரை, சீனா திபெத்தை ஒரு தேசியப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது. நேபாளத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திர பஜ்கெயினும், சீனா வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். வெள்ளம் தொடர்பான காணொளிகளை நீக்குவது, சீனா எதை மறைக்க முயற்சிக்கிறது என்பது குறித்த கேள்விகளை எழுப்புகிறது என்று அவர் கூறினார்.
நேபாளத்தில் 669 பேர் பலி, 2,426 பேர் காணவில்லை
நேபாளத்தின் பேரிடர் முகமையின்படி, நாட்டில் 669 பேர் உயிரிழந்துள்ளனர். 2,426 பேரைக் காணவில்லை. திபெத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 550க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது. நேபாளத்தில் மீட்புக் குழுக்கள் இதுவரை 3,700-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, புதன்கிழமை நேபாள-திபெத் எல்லையைத் தாக்கிய வலுவான, அபாயகரமான நீர்ப் பேரலையானது, ஒரு பனியாறு உடைந்ததால் ஏற்பட்டது.
