கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், இடுக்கி மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்த தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) களமிறக்கப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தின் அதூர்மலா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு முழுவதுமாக இடிந்து விழுந்ததில், சுமதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது வீடு முற்றிலும் தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கியிருந்த அவரது கணவர் ரவி மற்றும் மகனை அண்டை வீட்டாரும், மீட்புப் படையினரும் பத்திரமாக மீட்டு, தொடுபுழாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனிடையே, வாகமண் பகுதியில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் பிரபாகரன் நாயர் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இடுக்கி மாவட்டத்திற்கு, தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்திலிருந்து வீரர்கள் விரைந்து சென்றுள்ளனர். அவர்களுடன் இணைந்து கேரள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, உள்ளூர் காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அரக்கோணத்தில் அமைந்துள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மைய வளாகத்திலிருந்து, ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 9 குழுக்கள் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், நீந்தகரா கடற்பகுதியில் பலத்த அலையால் மீன்பிடிப் படகு கவிழ்ந்த விபத்தில் ராஜீவன் என்ற மீனவர் உயிரிழந்துள்ளார். மேலும், இரண்டு மீனவர்கள் மாயமாகியுள்ளனர்.
திருவனந்தபுரம் மாவட்டம் முதலைப்பொழி கடற்பகுதியிலும் பலத்த காற்றால் மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில், அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலில் மாயமாகியுள்ளனர். கடல் சீற்றம் மற்றும் பலத்த அலைகள் காரணமாக அவர்களைத் தேடும் பணி சவாலாக மாறியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும், அடுத்த சில மணி நேரங்களுக்கு இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மற்றும் கோழிக்கோடு ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மிகத் தீவிர மழை எச்சரிக்கையும், மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால், முக்கிய மலைப்பாதைகளில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் உள்ள பல சிறிய அணைகளின் மதகுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாகச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இடுக்கி மட்டுமின்றி, மத்திய கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் புதிய நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அருவிகள், மலைப்பிரதேசங்கள் மற்றும் நீர்நிலைகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல அரசு கடுமையான தடைகளை விதித்துள்ளது. மேலும், கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும், உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பு முகாம்களுக்கு உடனடியாகச் செல்லுமாறு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) கேட்டுக்கொண்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர்கள் அவசர விடுமுறை அறிவித்துள்ளனர்.
நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக கேரள மாநில அமைச்சர்கள் பங்கேற்ற அவசர ஆய்வுக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரக்கோணத்தில் அமைந்துள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்திலிருந்து மொத்தம் 9 குழுக்கள் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இடுக்கி மாவட்டத்தின் அதூர்மலா பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், கேரள காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகள் இணைந்து தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், கோட்டயம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், பல இடங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறை மற்றும் மாநில மீட்புப் படையினர் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
