‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) இயக்கத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான கே. அண்ணாமலை, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janata Party – CJP) அமைப்பு தொடர்பான தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். சிஜேபி அமைப்புக்கு அரசியல் ரீதியாகத் தாங்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றும், ஜனநாயக நாட்டில் அந்த அமைப்பினர் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை மட்டுமே ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் சிஜேபி அமைப்பின் போராட்டம் தொடர்பாக, அண்ணாமலை தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவுகளிலும் செய்தியாளர் சந்திப்புகளிலும் டெல்லி காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். சிஜேபி அமைப்பினர் போராட்டம் நடத்த அனுமதி கோரியவுடன், ஜந்தர் மந்தர் பகுதி போராட்டம் நடத்துவதற்கான இடமாக இல்லை என அவசரமாக அறிவிக்கப்பட்டது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், டெல்லி காவல் துறையைச் சேர்ந்த உதவி ஆணையர் (ACP) ஒருவரே சிறப்பு நிர்வாக நடுவராகச் (Special Executive Magistrate) செயல்பட்டு, சிஜேபி தலைவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதாகக் கூறப்படும் நடவடிக்கையையும் அண்ணாமலை விமர்சித்தார். காவல் துறையினரே புகார்தாரர்களாக இருக்கும் நிலையில், அதே துறையைச் சேர்ந்த அதிகாரி காவலை நீட்டிப்பது சட்ட விதிகளுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜந்தர் மந்தரில் தேசியக் கொடியை ஏந்தியதற்காகக் கைது செய்யப்பட்ட சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோரின் பிணை உத்தரவாதப் பத்திரங்கள் (Sureties) தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது ஏன் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக் காலங்களில் பாஜகவினர் தடுப்புகளைத் தாண்டிப் போராட்டங்களில் ஈடுபட்டபோது, இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என்றும் அவர் வினவினார். தற்போதைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் விமர்சித்தார்.
மத்திய அரசையும் டெல்லி காவல் துறையையும் அண்ணாமலை விமர்சித்ததைத் தொடர்ந்து, தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மற்றும் வினோத் செல்வம் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின்போது (SIR) போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று ஆதரித்துப் பேசிய அண்ணாமலை, தற்போது பாஜகவிலிருந்து விலகிய பிறகு சிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். பொது அமைதியைப் பாதுகாப்பது மத்திய அரசின் கடமை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, மத்திய அரசுக்கு எதிராகவோ அல்லது காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராகவோ கருத்துத் தெரிவித்தாலே, அதைத் தேச விரோதம் அல்லது வெளிநாட்டுச் சதி என்று முத்திரை குத்துவது சலிப்பை ஏற்படுத்துவதாகக் கூறினார். பல்வேறு மாநிலங்களில் இந்தியக் காவல் பணியில் (IPS) அதிகாரியாகப் பணியாற்றிய தனக்கு, நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை குறித்துத் தெளிவான புரிதல் இருப்பதாகவும், எனவே தேசபக்தி குறித்து யாரும் தனக்குப் பாடம் நடத்தத் தேவையில்லை என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பில் உள்ள தேசிய நலனில் அக்கறை கொண்ட சில நிர்வாகிகள், சிஜேபி அமைப்புக்கு ஆதரவாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டதை எதிர்பார்க்கவில்லை என்றும், இது அமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாநாட்டில் தனது நிலைப்பாட்டை அண்ணாமலை தெளிவுபடுத்தினார். பிரதமர் மோடி ஒரு நல்ல பிரதமர் என்றும், அவர் சிறப்பான பணிகளைச் செய்து வருகிறார் என்றும் குறிப்பிட்ட அவர், சிஜேபி அமைப்புக்கு ‘வி தி லீடர்ஸ்’ அரசியல் ரீதியாக ஆதரவு அளிக்காது எனத் தெரிவித்தார். அதேநேரத்தில், ஜனநாயக நாட்டில் அந்த அமைப்பினர் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை ஆதரிப்பதாகவும் கூறினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “இன்றைக்கு சிஜேபி என்று ஒரு கட்சி இருக்கிறது. இந்தியாவில் இளைஞர்கள் போராடி, பல்வேறு இடங்களில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சிஜேபி கட்சிக்கு ‘வி தி லீடர்ஸ்’ ஆதரவு கொடுக்குமா என்று கேட்டால், எப்போதுமே ஆதரவு கொடுக்க மாட்டோம். காரணம், நம்முடைய இலக்கு வேறு; அவர்களுடைய இலக்கு வேறு.
ஆனால், சிஜேபி கட்சி இந்தியாவில் போராடுவதற்கு உரிமை இருக்கிறதா என்று கேட்டால், நிச்சயமாக இருக்கிறது. அதேபோல திமுகவுக்கும் போராடுவதற்கு உரிமை இருக்கிறது. ஒரு ஸ்பிரிங்கை அழுத்தினால், அது மீண்டும் மேலெழும். ஸ்பிரிங்கை எவ்வளவு அதிகமாக அழுத்துகிறீர்களோ, அவ்வளவு வேகமாக அது மேலெழும். இதை ஆட்சியில் இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, சிஜேபி அமைப்பினரைக் கைது செய்வதன் மூலம் பாஜக உண்மையில் அந்த அமைப்பை எதிர்க்கிறதா அல்லது அவர்களுக்கு இலவச விளம்பரம் தேடித் தருகிறதா என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். விளம்பரத்திற்காக சிஜேபி அமைப்பினர் பணம் செலவிட்டிருந்தால்கூட, இவ்வளவு சிறப்பான விளம்பரக் குழு அவர்களுக்குக் கிடைத்திருக்காது என்றும், தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அவர்களைப் பிரபலப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு, தன்னை எப்போதும் முன்னிலையில் வைத்துக்கொள்வதற்காக ஒவ்வொரு முறையும் புதிய எதிரிகளை உருவாக்குவது போன்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் சிஜேபி அமைப்பின் போராட்டம் தொடங்கியதிலிருந்து, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற பெயரை மையமாகக் கொண்டு சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களும் மீம்ஸ்களும் பரவி வருகின்றன. இந்த அமைப்புக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவிப்பதாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ‘கரப்பான் பூச்சி கட்சிக்கு அண்ணாமலை ஆதரவா?’ என்ற தலைப்பில் பல்வேறு விவாதங்களும் காணொளிகளும் பரவலாகப் பகிரப்பட்டன.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், சிஜேபியின் பெயரோ அல்லது அதன் போராட்ட உத்தியோ தங்களது இலக்கு அல்ல என்றும், தங்களுடைய இலக்கும் அந்த அமைப்பின் இலக்கும் வெவ்வேறானவை என்றும் அண்ணாமலை தெளிவுபடுத்தினார். சிஜேபி அமைப்பின் அரசியல் நோக்கங்களுக்கு ஆதரவு இல்லை; அதேநேரத்தில், ஜனநாயக நாட்டில் போராடுவதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு என்பதே தனது நிலைப்பாடு என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
