Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay

தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு: முதல்வர் விஜய் அதிரடி பதில் தனது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிரடி மனு தாக்கல் செய்துள்ளார்.

வெறும் தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால் மட்டும் தனது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியாது என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு விஜய் வெற்றி பெற்றார். இதில் பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் இரு வாக்காளர்கள் என மூன்று தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன. திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தனியாக ஒரு வழக்குத் தொடர்ந்தார். இதனால் விஜய்க்கு எதிராக மொத்தம் நான்கு தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளில், ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்று விஜய் பேசியது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், விஜய் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்த சொத்து மற்றும் நிதி விவரங்களில் குறைபாடுகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  “விமர்சனங்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் திட்டமிட்ட நகர்வுடன் CM விஜய் மீண்டும் டெல்லி பயணம்”

இதற்கு பதிலளிக்கும் வகையில், விஜய் தரப்பில் ‘Rejection of Plaint’ எனப்படும் மனுவைத் தாக்கல் செய்து, நான்கு தேர்தல் வழக்குகளையும் ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விஜய் தரப்பு மனுவில், “வாக்காளர்கள் உணர்ச்சிவசப்பட்டு வாக்களித்தனர்” என்று கூறுவது மட்டும் சட்டரீதியாக போதுமானதல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்தில் குழந்தைகள் பங்கேற்றதால் எத்தனை வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தன, அதனால் தேர்தல் முடிவு எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதற்கான உறுதியான ஆதாரங்களை மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை என்றும் வாதிடப்பட்டுள்ளது.

மேலும், “தேர்தல் முடிவு பாதிக்கப்பட்டது”, “மறைக்கப்பட்டது”, “ஊழல் முறைகேடு” போன்ற பொதுவான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மட்டுமே தேர்தல் வழக்கைத் தொடர்வதற்கான வலுவான காரணமாகிவிடாது என்றும் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் சுற்றறிக்கைகளை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 100-ன் கீழ் வரும் நீதிமன்ற உத்தரவுகளாகக் கருத முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் வழக்கில், விஜய்யின் பிரச்சாரத்திற்கு வெளிநாட்டுப் பணம் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை மறுத்த விஜய் தரப்பு, யார் பணம் வழங்கினர், எவ்வளவு பணம் வழங்கப்பட்டது, எந்த வங்கிக் கணக்கு மூலம் பணம் வந்தது என்பதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இந்தக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்க  பாஜக மீது தவெக பாசம்..? விஜய் மீது கம்யூனிஸ்ட் சந்தேகம்..! புறக்கணிப்பின் பகீர் பின்னணி..!

அதேபோல், விஜய் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வாக்குச் சேகரித்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கும் அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் ஒருவர் வழிபாட்டுத் தலத்திற்குச் செல்வதோ அல்லது பிரார்த்தனை செய்வதோ சட்டப்படி குற்றமல்ல என்றும், தாம் அங்கு சென்று மத ரீதியாக வாக்கு கேட்டதாகக் கூறுவது தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த வழக்குகளில் முதல்வர் விஜய் மற்றும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தங்களது பதில் மனுக்களைத் தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன், ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யாவிட்டால் இருவருக்கும் தலா ₹50,000 அபராதம் விதிக்கப்படும் எனக் கடுமையாக எச்சரித்திருந்தார்.

இந்தக் கெடுவுக்குள் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அபராதம் விதிக்கப்படும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிராகரிப்பு மனுக்கள் மீதான அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த விசாரணையில், விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட நான்கு வழக்குகளும் ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யப்படுமா அல்லது தொடர்ந்து விசாரிக்கப்படுமா என்பது குறித்து முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க  பங்காளிகளின் 'செல்ஃபி'..! அதிமுக தொண்டனின் ரத்தக் கண்ணீர்..! திருப்பத்தூரை அடகு வைத்த மாஜி..! -'விசில்' சத்தத்தில் அதிரும் துரோகம்..!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago